மீண்டும் ஏன் என்னை தேடுகின்றாய்

Spread the love

மீண்டும் ஏன் என்னை தேடுகின்றாய்

தேறவில்லை கல்வியென்று
தெருவெறிந்து போனவளே …
ஓடி வந்து பாடுகிறாய்
ஒரு தலையாய் தேடுகிறாய் …..

ஊரெல்லாம் உன் பேச்சால்
உருண்ட தொரு காலத்தில் – நீ
காணாமல் போன போது
காரிருள் படர்ந்ததடி ….

என் எழுத்தாணி தலை குனிய
ஏதறிந்து நான் எழுத …?
வார்த்தைகளை தேடுகிறேன்
வாயுக்குள் சிக்குதடி ……

மீண்டும் ஏன் என்னை தேடுகின்றாய்

விடை பெற்று போனவளே – என்
விடுதிக்கு வந்ததென்ன …?
ஏதெடுத்து யான் வழங்க
என் மனதை தேடுகின்றாய் …?

கடந்து வந்த காலங்களில்
நடந்து வந்த நினைவுகளை …
மீள் உனக்கு தருவேனா …?
மீளா துயில் கொள்வேனா …?

வன வாசம் போகாமல்
மண வாசம் பற்றியதால் …
உன்னை யான் மறப்பது தான்
உலகத்தின் விதியாம் …?

ஈடு வைக்க என்னிடத்தில்
ஏதுமில்லை அறிந்திடுவாய் …
ஏதெடுத்து நான் வழங்க
என்னை ஏன் தேடி வந்தாய் ..?

கூடு விட்டு போனவளே
கூடு தேடி வந்து விட்டாய் ….
நீ அழுது பயனில்லை – என்
நினைவுகளில் நீயில்லை ……

கந்தனவன் கோவணத்தை
கை பிடிக்க போவதில்லை …
விட்டு விடை பெற்றுவிட்டேன்
விடயங்கள் புரிந்து விடு …

கை மாறி போன பின்னே – நான்
காரிகையை கரம் பிடித்தேன்
கூடி வந்து வாழும் அவள்
கூண்டை விட்டு போவதுவோ …?

தேடி வந்த வாழ்கையில
தேற்றங்களை தந்தவளை…
வீசி விட்டு போவதுவோ …?- நான்
விடை பெற்று செல்வதுவோ …?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -18/11/2017

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply