மேன்முறையீட்டு நீதிமன்றிலும் கெஹலியவிற்கு தொடரும் சிக்கல்

நான் பதவி விலக மாட்டேன் ரம்புக்வெல்ல
Spread the love

மேன்முறையீட்டு நீதிமன்றிலும் கெஹலியவிற்கு தொடரும் சிக்கல்

விசாரணை முடியும் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை வலுவிழக்க செய்யுமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்திருந்த மனுவை முதல் சந்தர்ப்பத்திலேயே இரத்து செய்யுமாறு சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று கோரிக்கை விடுத்தார்.

தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் விசாரணை முடியும் வரை தன்னை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பித்த உத்தரவை வலுவிழக்க செய்யுமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த ரிட் மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டி.என்.சமரக்கோன் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன், ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்து இந்த ரிட் மனுவை முதல் சந்தர்ப்பத்திலேயே நிராகரிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்து சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவின் பிணை கோரிக்கையை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று (10) நிராகரித்துள்ளது.

பிணை வழங்குவதற்கு விசேட சமர்ப்பணங்கள் எதுவும் முன்வைக்கப்படாதமையே இதற்குக் காரணமாகும்.

அத்துடன், குறித்த கொள்வனவு நடவடிக்கையில் கணிப்பீட்டு குழு உறுப்பினராக இருந்த வைத்தியர் துசித சுதர்ஷனின் பிணை கோரிக்கையை பரிசீலிப்பதை ஒத்திவைத்த மாளிகாகந்த நீதவான் லொச்சனி அபேவிக்ரம, சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.