பேராபத்தில் தமிழர்கள் – எச்சரிக்கும் பிரபாகரனுடன் இருந்தவர்

Spread the love

மு .திருநாவுக்கரசு

“” இறைமை, சிங்கள நாடு”” இதுவே தாமரை மொட்டின் கொள்கையும், கோட்பாடும் தேர்தல் கோசமுமாகும்.

இலங்கையின் தேர்தல் அரங்கில் தூணேறிய சிங்கம் – டிராகன் – கழுகு என்பன களமாடுகின்றன.

நெருப்பை சுவாசிக்கும் டிராகன் இலங்கையின் அரசியல் தடாகத்திலுள்ள தாமரை மொட்டைச் சூட விரும்புகிறது.

அதனைத் தடுத்து நிறுத்த தூணேறிய சிங்கமும், கழுகும் அன்னத்தின் பின்னால் நிலை எடுக்கின்றன. இது ஒன்றும் பஞ்சதந்திரக் கதையல்ல; இலங்கை அரசியலின் உண்மையான நிலை இதுதான்.

கார்த்திகைப் பூவை வாளேந்திய சிங்கம் வெட்டி வீழ்த்திய பின்பு அந்த சிங்கத்தின் எஜமான்கள் தற்போது தாமரை மொட்டைக் கையிலெடுத்து நெருப்பை சுவாசிக்கும் டிராகனின் தலையிற் சூடி இலங்கை அரசியல் அரங்கில் சாகசம் புரிய முயற்சிக்கின்றார்கள்.

கார்த்திகைப் பூவை வாளேந்தி வெட்டி வீழ்த்தியவர்கள் இப்போது தாமரைப் பூவேந்தி அரசியற் சாகசம் புரியப் புறப்பட்டுள்ளார்கள்.

தாமரை மொட்டை அன்னப்பறவையால் கொத்தி விழுங்க முடியுமென தமிழரசுக் கட்சி நம்புகிறது.

அதேவேளை தாமரைப் மொட்டைப் புடைசூழ்ந்து பௌத்த மகா சங்கமும், இராணுவமும் , நெருப்பை சுவாசிக்கும் டிராகனும் பலமாக நிலையெடுத்துள்ளன என்பதும் கவனத்துக்குரியது.

தற்போதய தேர்தல் இடாப்பின்படி ஒரு கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் 81% இற்கு மேல் வாக்களிக்கப்பட்டதனால் அதை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில் சுமாராக 82 % வாக்காளர்கள் வாக்களிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தேர்தலில் சுமாராக ஒரு கோடியே 31 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கக் கூடும் என கணிக்கலாம்.

அப்படியாயின் 65 இலட்சத்திற்கும் 66 லட்சத்துக்கும் இடைப்பட்ட வாக்குகளைப் பெறக்கூடிய ஒரு வேட்பாளர் ஜனாதிபதியாகத் தெரிவாக முடியும்.

2018 ஆம் ஆண்டு நாடு தழுவிய ரீதியில் நிகழ்ந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 40.47 % வாக்குகள் கிடைத்தன.

அதேவேளை தற்போது தாமரை மொட்டுடன் தோழமை பூண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அப்போது 12.10% வாக்குகள் கிடைத்தன.

இதன்படி தற்போது 52.57% வாக்குகளைப் பெறலாம் என்பதற்கான முதலாவது ஏதுநிலை உண்டு.

அதேவேளை இறுதியாக கடந்த அக்டோபர் மாதம் 10 திகதி நிகழ்ந்த எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலின் போது மொட்டு சின்னத்தின் கீழான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 57 % வாக்குகள் கிடைத்துள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 12% வாக்குகள் கிடைத்துள்ளன.

இதன்படி தனிச்சிங்கள வாக்குகளில் மொத்தம் 69% வீதமான வாக்குகளை மேற்படி இரு கட்சிகளாலும் இணைந்து பெறமுடிந்துள்ளது.

இதனை நாடுதழுவிய மொத்த வாக்குகளினோடு பொருத்திப் பார்க்கையில் இது 52 % வீதத்திற்கு மேலான வாக்குகளை காட்டுகிறது.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் சிங்கள மக்கள் சுமாராக 75% ஆவார். எனவே அளிக்கப்படக்கூடிய மொத்த வாக்குகளில் 98 லட்சத்துக்கு மேல் சிங்கள மக்களின் வாக்குகள் மட்டும் அமைய முடியும்.

இதன்படி சிங்கள மக்கள் மத்தியில் மட்டும் 52% வாக்குகளை மேற்படி கணக்கின்படி தாமரை மொட்டால் நிலைநாட்ட முடிந்தால் அவர்களால் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து மட்டும் 68 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற முடியும்.

இதன்படி ஜனாதிபதியாகுவதற்கு தேவையான மொத்த வாக்குகளின் தொகையில் சுமாராக இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை அவர்களால் பெறமுடியும் என்பதும் ஒரு கணிப்பு.

அளிக்கப்படக்கூடிய ஈழத் தமிழர்களின் மொத்த வாக்குகள் சுமாராக 14 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல்.

அவ்வாறே அளிக்கப்படக்கூடிய முஸ்லீம் மக்களின் மொத்த வாக்குகள் சுமாராக 12 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல் .

அதேபோல் அளிக்கப்படக்கூடிய மலையக மக்களின் மொத்த வாக்குகள் சுமாராக 5 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல்.

இங்கு முஸ்லிம்களின் மொத்த வாக்குகளில் 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேல் தென் இலங்கையிலும் சுமார் 6 லட்சம் வரை கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் உள்ளன.

தென் இலங்கை வாழ் முஸ்லிம்கள் சிங்கள மக்கள் தொகையுடன் கலந்து பின்னிப்பிணைந்தும், அவர்களில் தங்கியும் வாழ்பவர்கள்.

அவர்களின் வர்த்தகமும், வியாபாரமும் பெரிதும் சிங்கள மக்கள் தொகையின் மீதே தங்கியுள்ளது. இவ்வாண்டு நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல்களின் பின்னணியில் சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் வெடித்திருந்தன.

இந்நிலையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முஸ்லிம் மக்களின் வாக்குகள் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக அளிக்கப்பட்டது போல் இம்முறை அமைவது கடினம்.

தமது சொந்த பாதுகாப்பை கருதி இருபெரும் கட்சிகளில் ஒன்றை மட்டும் சாராது இரு கட்சிகளுக்கும் சரிக்கு சரி வாக்களிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் முஸ்லீம் மக்களுக்கு உண்டு.

எனவே தென்பகுதியில் வாழும் முஸ்லிம்களிடமிருந்து சுமாராக மூன்று லட்சம் வாக்குகளாவது கோட்டாபயவுக்கு கிடைக்க வாய்ப்புண்டு.

கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு உண்டு. ஆதலால் கிழக்கில் நிலை வேறு. எப்படியோ கிழக்கிலும் முஸ்லிம்கள் மத்தியில் இருந்து ராஜபக்சக்களுக்கு ஒரு குறைந்தபட்ச வாக்குகளாவது நிச்சயம் கிடைக்கும்.

குத்துமதிப்பாக கூறுமிடத்து முஸ்லிம் மக்களின் 12 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகளில் இருந்து மூன்றில் ஒரு பங்கு வாக்குகளாவது ராஜபக்சக்களுக்கு கிடைக்க முடியும் என்று கணித்தால் நான்கு லட்சம் வரையிலான வாக்குகளை ராஜபக்சக்கள் பெறமுடியும்.

தென்னிலங்கை தவிர்ந்த வடக்கு கிழக்கிலுள்ள ஈழத்தமிழர்களின் வாக்குகளில் ஒரு இலட்சத்திற்கும், ஒன்றரை லட்சத்திற்கும் இடையிலான வாக்குகளை ராஜபக்சக்கள் பெறக்கூடிய ஏதுநிலை உண்டு.

அதேவேளை மலையக மக்கள் மத்தியில் இருந்தது சுமாராக 1 லட்சம் வாக்குகளையாவது ராஜபக்சக்களால் பெறமுடியும் என்று கூறப்படுகிறது.

இவை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது சுமாராக 74 லட்சத்திற்கும் குறையாதளவு வாக்குகளை (56.5%) ராஜபக்சக்களால் பெறமுடியும் என்ற அபாயகரமான புள்ளிவிவரம் கண்முன் தோன்றுகிறது.

பொதுவாக ஜே.வி.பி கட்சியானது சிங்களமக்கள் மத்தியிலுள்ள “”கரவா”” சாதிச் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற கணிப்புண்டு.

நாட்டின் மொத்த சனத்தொகையில் சிங்கள “”கரவா “”சமூகத்தின் மக்கள் தொகை 10%. இதற்கிணங்க அளிக்கப் படக்கூடிய “”கரவா”” சமூகத்தின் மொத்த வாக்குகள்
13 இலட்சத்திற்கு மேல்.

ஆனால் இதில் கத்தோலிக்க”” கரவா””சமூகத்தினரின் தொகை 5 லட்சம் வரை என்று கூறப்படுவதால் அவர்கள் அனேகமாக ஐதேகவுக்கு வாக்களிப்பார்கள் என்ற கணிப்பு உண்டு.

இதன்படி மிச்சமுள்ள பௌத்த சிங்கள கரவா சமூகத்தின் எட்டு லட்சம் வாக்குகளில் பெருமளவு வாக்குகள் ஜேவிபியை சென்றடையும் என்று கருதப்படுகிறது.

அத்துடன் கடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஜேவிபி சுமாராக 7 லட்சத்து 11 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தது .

அதன்படி சிங்கள மக்கள் மத்தியில் உள்ள புதுமை விரும்பும் இளைஞர்கள் மத்தியில் சாதி கடந்து வாக்களிக்க கூடிய ஒரு லட்சத்துக்கு குறையாத இளைஞர்களின் வாக்குகள் ஜேவிபிக்கு கிடைக்க வாய்ப்புண்டு என்பதும் இங்கு கவனத்துக்குரியது.

எது எப்படியோ சுமாராக ஏழரை லட்சத்திற்கு குறையாத வாக்குகளைப் பெறக்கூடியதற்கான அடிப்படை வாக்கு வங்கி ஜேவிபிக்கு உண்டு.

இங்கு ஜேவிபியுடைய இரண்டாவது விருப்பத் தேர்வு வாக்குகள் அளிக்கப்படுமா இல்லையா என்ற வாதம் ஒருபுறமிருக்க., மக்கள் விரும்பினால் இரண்டாவது வாக்கை தாம் விரும்பும் வேட்பாளருக்கு அளிக்கலாம் என்று ஜேவிபி கூறுவதாக இன்னொரு செய்தியும் வெளியாகியுள்ள நிலையில் இந்த இரண்டாவது வாக்கு யாருக்கு அளிக்கப்படும் என்பதிலேயே இதன் தாக்கம் பற்றிய அளவு தங்கியுள்ளது.

அத்துடன் ராஜபக்சக்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள சந்திரிக்கா பண்டாரநாயக்கவினால் சுதந்திரக் கட்சியிலிருந்து எவ்வளவு வாக்கை பிரித்து சஜித் பிரேமதாசவின் வாக்குப் பெட்டிக்குள் சேர்க்க முடியும் என்பதும் கணித்திடக் கடினமான இன்னொரு பிரச்சினையாகும்.

மேலும் சஜித் பிரேமதாஸவிற்கு தமிழரசுக் கட்சி வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளதை ஆதாரமாகக் கொண்டு தெற்கில் தீவிர பௌத்த சிங்களப் பேரலையை ராஜபக்சக்கள் தட்டியெழுப்பத் தொடங்கியுள்ளனர் .

இப்பின்னணியில் சஜித் பிரேமதாசாவுக் கான தமிழரசு கட்சியின் ஆதரவு “வரமா,சாபமா” என்ற கேள்வி பெரிதாக உண்டு.

எது எப்படியோ ஒட்டுமொத்த பௌத்த சிங்கள மகாவம்ச மனோநிலையின் பின்னணியில் பௌத்த மகா சங்கம், இராணுவம், டிராகன் என்பனவற்றால் புடைசூழப்பட்ட சூழலில் தாமரை மொட்டுக்கு அண்மைக்காலங்களில் கிடைத்திருக்கக்கூடிய தேர்தல் புள்ளிவிபரங்களும் இணைந்து தாமரை மொட்டை தூக்கலாக வைத்துள்ளன என்பது மட்டும் தெரிகிறது.

Leave a Reply