தாயுமானவள்

தாயுமானவள்
Spread the love

தாயுமானவள்

தாயுமானவள் “அண்ணா…அப்பாட்டைப் போப்போறேன்” “அம்மாட்டைப் போப்போறன் “… என்று உடலில் சத்திர சிகிச்சைக்காக ஏற்றப்பட்டு பின்னர் வலுவிழந்து கொண்டிருக்கும் அனஸ்தீசியா மருந்தின் தாக்கத்தினால் அரைகுறை மயக்கத்தில் புசத்திக் கொண்டிருந்தாள் அகல்.

அகலுக்கு கனவுலகில் எங்கோ வெண் பஞ்சுக் கூட்டத்தின் நடுவே தேவதூதர்களுடன் பறப்பது போலிருந்தது…

அவளுக்குத் தேவதூதர்களாக மலர்ந்த முகத்துடனும் கனிந்த பார்வுயுடனும் கண் முன்னே தென்படும் எல்லா மருத்துவப் போராளிகளும் தோன்றினார்கள்.

அருகிலே கலங்கல் உருவமாகத் தெரிந்த stethoscope ஐ கழுத்தில மாலையாக அணிந்தவாறு blood pressure ஐயும் pulse ஐயும் check பண்ணிக் கொண்டிருந்த

போராளி வைத்தியரான இனியன் ரொக்டரைப் பார்த்துத் தான் அகல் அனஸ்தீசியா மருத்தின் தாக்கத்தினால் கையைக் காலையடித்து திமிறிக் கொண்டு இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தாள்.

அவனும் சகோதர பாசத்துடனும் தாயைப் போன்ற பரிவுடனும் அவளது தலையைத் தடவியவாறு “ஓமம்மா அம்மா அப்பாட்டை போகலாம்…

பிள்ளைக்கு காயம் எல்லாம் மாறினவுடன எல்லோரையும் பார்க்கப் போகலாம்” என்று கூறிச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான்…

அரைகுறை மயக்க நிலையில் அகலின் ஆழ் மனதில் இருந்த ஆசைகள் எல்லாம் கேள்விக் கணைகளாக இனியன் டொக்டரை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தன.

அவனும் அலுக்காமல் சலிக்காமல் அவளது எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளித்தவாறு இருந்தான்.

அழகிய பூவொன்று வாடினாற் போலிருந்த அவளது முகத்தைப் பார்க்க அவனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

போர் முன்னரங்கப் பகுதி ஒன்றில் களமருத்துவப் பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த போது இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதலில்

பி.கே இன ஆயுத ரவை ஒன்று அவளது இடுப்பு பகுதிக்குள்ளால் நுழைந்து நெஞ்சுப் பகுதியால் வெளியேறி இருந்தது.

இதனால் அவளது சிறு குடலில் பாதிப்பு ஏற்பட்டதனால் அதனின் ஒரு பகுதி அகற்றப்பட்டிருந்தது.

இனியன் டொக்டரின் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன…அவனுக்கு அகலைச் சிறுவயது முதலே தெரியும்.

அவனின் சித்தியின் பக்கத்து வீட்டில் தான் அவள் வீடு இருந்தது. அவனின் சித்தியின் மகள் மதுவின் சிறு வயதுத் தோழியும் பாடசாலை நண்பியும் தான் அவள்.

யாழ்ப்பாணம் திண்ணைவேலியில் பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் அவர்களது வீடு அமைந்திருந்தது.

அவன் அமைப்பில் போராளியாக இணைய முதல் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடத்தில் இரண்டு ஆண்டுகள் கல்விகற்ற காலத்தில்
சித்தி வீட்டில் தான் தங்கி நின்று கல்வி கற்றான்.

அப்போதுதான் அகல் அவனுக்கு அறிமுகம் ஆனாள்.அப்போது அவளுக்கு பன்னிரண்டு வயதிருக்கும்.

அவனின் சித்தியின் மகளும் அவளும் ஆண்டு ஐந்து புலமைப்பரிசுப் பரீட்சையில் அதிஉயர் புள்ளிகள் பெற்று யாழ்நகரில் பிரபல்யமான பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுக் கொண்டிருந்தார்கள்.

அகலின் அப்பா யாழ் நகரின் பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர்.

அம்மா வங்கி ஒன்றின் தலைமை அதிகாரியாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார்.

அம்மா, அப்பா, அவளைவிட இரண்டு வயது குறைந்த தம்பி என அழகிய அவளது சிறு குடும்பம் இருந்தது.

நல்ல சிவந்த நிறமும் கருந்திராட்சை போன்ற துரு துரு விழிகளும் செப்பு வாயும் சுருட்டை முடியும் கொழு கொழு கன்னங்களுமாக பார்ப்பவர்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய சிறுமியாக அவள் தோற்றம் அமைந்திருந்தது.

படிப்பிலும் விளையாட்டிலும் வலு கெட்டிக்காரி. மதுவுடன் விளையாட வரும்போது இனியனுடனும் அண்ணா…

அண்ணா என்று மிகவும் அன்பாக அழைத்துப் பழகுவாள்.

அவன் படிக்கும் புத்தகங்களை ஆர்வத்துடன் தானும் எடுத்து வாசித்துப் பார்த்து விட்டு அவற்றினைப்பற்றி எதுவும் நன்றாகப் புரியாத போதும் “அண்ணா…

நானும் கெட்டிக்காரியாகப் படித்து வளர்ந்ததும் ஒரு டொக்டராக வருவேன் ” என்று அழகிய அவளது கண்களில் கனவு மிதக்கக் கூறுவாள்.

மகிழ்வாகப் போய்க்கொண்டிருந்த அவளது வாழ்க்கையில் அவர்களது குடும்பத்தில் முதலாவதாக ஒரு பேரிழப்பு ஏற்பட்டது.

கொழும்பில் அவளது மாமா பிரபல சத்திரசிகிச்சை நிபுணராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அவர் குடும்பத்துடன் தான் கொழும்பில் வைத்தியர்களுக்கான குவாட்டர்சில் அகலின் அம்மம்மா, தாத்தாவும் வசித்து வந்தனர்.

1983 ஆம் ஆண்டு கொழும்பு வாழ் தமிழ் மக்கள் மீது சிங்களக் காடையரினால் கட்டவிழ்த்து விடப்பட்ட திட்டமிடப்பட்ட இனவழிப்பில் கொழும்பில் பிரபல சத்திர சிகிச்சை நிபுணராக அவளது மாமா இருந்த போதும் தமிழர்கள் என்ற

காரணத்தினால் அவளது மாமா, மாமி மற்றும் அவர்களது இரண்டு வயதுக் குழந்தையும் குவார்டர்சில் வைத்துக் கதறக் கதற வாளால் வெட்டப்பட்டு எரியூட்டிக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

அவளது அம்மம்மா, தாத்தா கொழும்பில் அவர்கள் இடத்திலிருந்து சிறிது தள்ளி வேறு ஒரு இடத்தில் வசித்து வந்த உறவினர் ஒருவரின் திருமண வீட்டிற்குச் சென்றபடியால் அந்தச் சம்பவத்தில் இருந்து தப்பியிருந்தனர்.

பின்னர் அந்த உறவினர் குடும்பத்துடன் சேர்ந்து அவளது அம்மம்மாவும், தாத்தாவும் உடுத்த உடையுடன் மாற்றுடை இல்லாது வவுனியா காட்டுப்பகுதியினூடாக நடையில் பல சிரமங்களுக்கு மத்தியில் தப்பி யாழ்ப்பாணம் வந்து அவளது குடும்பத்துடன் தங்கியிருந்தனர்.

அம்மம்மா, தாத்தாவிடமிருந்து ஆடிக் கலவரம் தொடர்பான செய்திகளை தூண்டித் துருவி அறிந்த அகலின் மனதில் அப்போதே இலங்கை அரசின் மீது ஆழமான ஒரு வெறுப்பு ஏற்பட்டிருந்து. அம்மம்மா,

தாத்தாவிடம் அறிந்த ஆடிக் கலவரம் தொடர்பான செய்திகளை இனியவனுடனும் பகிர்ந்து “ஏன் அண்ணா சிங்களவர்கள் இப்படித் தமிழ் மக்களுக்குச் செய்யினம் ” என்று கவலையுடன் கேட்பாள்.

இனியவன் அந்தச் சிறுமிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறுவான்.

பின்னர் காலவோட்ட மாற்றத்தில் காலத்தின் தேவை அறிந்து இனியவனும் தனது படிப்பை இடைநிறுத்தி விட்டு போராளியாக மாறி மருத்துவப்போராளியாக கடைமையாற்றிக் கொண்டிருந்தான்.


தமிழீழ மருத்துவப் பிரிவின் மருத்துவக் கல்லூரியில் புதிதாக உருவாக்கப்பட்ட அணி ஒன்றிற்கான மருத்துவப் போராளிகளுக்கு வகுப்பு எடுப்பதற்காக இனியவன் ஒரு முகாமுக்குச் சென்றிருந்த போது

“ரமணன் அண்ணா” என்று இனியவனின் சொந்தப் பெயரைச் சொல்லி அழைக்கும் ஒரு பெண்ணின் குரல் பின்னாலிருந்து கேட்டது.

திருப்பிப் பார்த்தால் மடித்துக் கட்டிய இரட்டைப் பின்னலுடன் வெள்ளை நிற சேட்டும் கறுப்புநிற ஜீன்சும் இடுப்பில் கறுப்புப் பட்டியும் அணிந்தபடி

மெல்லிய வெள்ளைநிறத் தோற்றத்துடன் அழகிய பெண் போராளி ஒருத்தி சிரித்த வண்ணம் நின்றிருந்தாள்.

இனியனுக்கு அவளைக் கண்டதும் முகம் எங்கோ கண்ட மாதிரி நினைவு வந்தது. யாரிது என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போது “ரமணன் அண்ணா…

என்னைத் தெரியவில்லையா…?நான் தான் மதுவின் பிரண்ட் ஜானு”…இப்ப என்ர பெயர் “அகல் ” என்றாள் சிரித்தபடி…

இனியவனுக்கு அவளைப் பார்க்க வியப்பாக இருந்தது.

கடைசியாக 12 வயதுச் சிறுமியாகக் கண்ட “ஜானுவை” இப்ப 20 வயது அழகிய இளம் பெண்போராளியான “அகல்” ஆகக் காணுகின்றான்.

அவளது தோற்றத்தில் முந்தி இருந்த குழந்தைத்தனம் மாறி இப்ப ஒரு “போராளிக்குரிய உறுதியும் வீரமும் மிடுக்கும்” காணப்பட்டது.

எனினும் கண்களில் ஏதோ ஒரு சோகம் இழையோடியிருந்ததை இனியவன் இனங்கண்டு கொண்டான்.

இனியவன் மேற்படிப்புக்காக மேற்கத்தைய நாடு ஒன்றிற்கு அமைப்பினால் அனுப்பப்பட்டு ஐந்து ஆண்டுகள் கற்கைநெறி நிறைவடைந்தவுடன்

ஒரு சத்திர சிகிச்சை நிபுணருக்கான தகுதிச் சான்றிதழுடன் தாயகம் திரும்பி வன்னிப்பகுதியில் மக்களுக்கும் போராளிகளுக்கான முழுமையான மருத்துவப் பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தான்.

இதனால் அவனுக்கு தனது சித்தி குடும்பம், ஜானு பற்றிய விபரங்கள் தெரியாதிருந்தது.

அகலுடன் தொடர்ந்து கதைத்துக் கொண்டு போகும்போது தான் சித்தி குடும்பம் பற்றிய அவளது குடும்பம் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொண்டான் இனியவன்.

இடிமேல் இடியாக அகலின் குடும்பத்திற்கு அடுத்த இரண்டாவது இழப்பும் ஏற்பட்டிருந்தது.

இலங்கை இராணுவத்தின் விமானத்தாக்குதலின் குண்டு வீச்சில் அவளது சிறிய தம்பியையும் அவள் இழந்திருந்தாள்.

இனியவனுக்குத் தெரியும் அகல் தனது தம்பி மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தாள் என்பது.

தம்பியின் இழப்பு பற்றி அவள் கூறும் போது கண்கள் சிறிது கலங்கினாலும் போராளிக்குரிய மனவுரத்துடன் கவலையை மறைத்து அவள் காட்டிய முகமாற்றத்தை பார்த்த இனியவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவளது தம்பியின் இழப்புக்குப் பின்னர் அவளது அம்மா, அப்பா, அம்மம்மா , தாத்தா எல்லோருக்கும் எல்லாமுமாக அவள் தான் இருந்திருக்கிறாள்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அவ்வளவு இழப்புகள் போர்ச்சூழலுக்கு மத்தியிலும் மனவுறுதியுடன் கற்று மிகச்சிறந்த அதி பெறுபேற்றைப் பெற்று க.பொ.த உயர்தரத்தில் உயிரியல்துறையில் எதிர்காலத்தில் ஒரு வைத்தியராக வரவேண்டும் என்ற கனவுடன் கல்வியைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

ஆனால் நாட்டின் போர்ச்சூழல் அவளைத் தொடர்ந்து கல்வி கற்க விடவில்லை. இராணுவத்தின் நிலப்பறிப்புகள், விமானக் குண்டு வீச்சுகள் ,

எறிகணை வீச்சுகள் இதனால் தொடர் இடப்பெயர்வுகள் எனத் தொடர்ந்த இராணுவ அட்டூழியங்களினால் காலத்தின் தேவை கருதி தன்னையும் போராளியாக இணைத்துக் கொண்டாள்.

அவள் உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி கற்றபடியினால் மருத்துப்பிரிவிற்குத் தெரிவு செய்யப்பட்டாள்.

அவளின் மிகச்சிறந்த க.பொ.த சாதாரண தரப் பெறுபேற்றின் அடிப்படையில் தமிழீழ மருத்துப் பிரிவில் போராளி மருத்துவர்களுக்கான மருத்துவக் கல்லூரியில் கல்வி கற்க நியமிக்கப்பட்டிருந்தாள்.

அங்கே போராளி மருத்துவ மாணவர்களுக்கான விரிவுரையாளராக இனியவன் வந்திருந்த போதே அகலை அவன் சந்தித்தான்.

அந்த மருத்துக் கல்லூரியில் அகல் தான் சிறிய வயதுப் போராளி .

ஆனாலும் அறிவில் முதிர்ந்த மற்றைய மருத்துவப் போராளிகளுக்கு நிகராக மிகவும் ஆர்வத்துடன் கற்கைநெறியைத் தொடர்ந்தாள்.

அங்கே மருத்துவப் போராளிகள் கற்கைநெறியையும் மேற்கொள்ளும் நேரத்தில் தேவைப்பட்டால் களமருத்துவப் பணிகள்,

காயப்பட்ட போராளிகளைப் பராமரித்தல், வைத்திய சத்திர சிகிச்சை நிபுணர்களுடன் இணைந்து காயப்பட்டு வரும் போராளிகளுக்கான சத்திரசிகிச்சைகளில் உதவியாகச் செயற்படுதல் போன்ற பணிகளையும் மேற்கொள்ளுவார்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மருத்தவப் போராளிகளின் பங்களிப்பானது தலையாயதும் காத்திரமானதுமாகும்.

களத்திலே காயப்பட்டு வரும் போராளிகளுக்கு அவர்களே அம்மாவாகவும் அப்பாவாகவும் அனைத்துமாகவும் இருந்து களத்திலும் சரி மருத்துவ முகாம்களிலும் சரி தங்களது பணிகளைச் செவ்வனே மேற்கொள்ளுவார்கள்.

தங்கள் தூக்கத்தை பசியை ஒறுத்து ஒரு தாய் தனது குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பாளோ அவ்வாறே காயப்பட்டு வரும் போராளிகளை அன்புடன்

அரவணைத்து ஆறுதல் கூறி குளிப்பாட்டி உணவூட்டி உடைமாற்றி எந்த அருவருப்போ முகச்சுளிப்போ அற்று எந்நேரமும் இன்முகத்துடன் கடமையாற்றுவார்கள்.

அவ்வாறே மருத்துவ முகாமிலே அகலும் அனைவருக்கும் தாயுமானவளாக விளங்கினாள்.

பாரிய விழுப்புண்களுக்குள்ளான போராளிகளுக்கு venflon மூலம் அடிக்கடி (injection) ஊசி மருந்து ஏற்றும் போது கை வீங்கி injection ஏற்ற முடியாதவாறு கடும் வேதனையாக இருக்கும்.

அதனால் மருத்துவப் போராளிகள் injection போட வரும்போது காயப்பட்ட போராளிகள் வலிவேதனையில் கத்தியவாறு போட மறுப்பதுண்டு.

ஆனால் அகல் injection போட வந்தால் அவர்கள் அமைதியாகப் போட விடுவார்கள்.

அவர்களுக்கு வலி தெரியாதவாறு நகைச்சுவைக் கதைகள் கூறி மென்மையாக பக்குவமாகச் சிரித்தபடியே injection ஐ ஏற்றிவிடுவாள் அவள்.

அதனால் காயப்பட்ட போராளிகள் எல்லோரும் “அகல் டொக்டர் வந்தால் தான் injection போடுவேன் ” என்று அடம் பிடிப்பதுண்டு.

அதைவிட வலிவேதனைகளால் சாப்பிட மறுத்து அடம் பிடிக்கும் போராளிகளையும் அன்பாக கதைத்து மிரட்டி தனது குழந்தைகளுக்குத் தாய் உணவூட்டுவது போன்ற பரிவுடனும் பக்குவத்துடனும் ஊட்டி விடுவாள்.

அவர்களும் அவளது அன்பான அணுகுதலைக் கண்டு எதிர்ப்புக் காட்டாமல் உண்ணுவார்கள்.

மருத்துவப் போராளியாக இருந்த போதும் அகலின் மனதிலும் எல்லாப் போராளிகளைப் போலவும் தானும் சண்டைக் களத்திற்குச் செல்ல வேண்டும் என்ற அவா நீண்ட காலமாகக் குடிகொண்டிருந்தது.

தனது பொறுப்பாளரிடம் அடிக்கடி “என்னை ஒரு தடவை என்றாலும் சண்டைக்கு விடுங்கோ அக்கா” என்று நச்சரிப்பாள்.

மருத்துவத்துறையில் கற்று நன்றாகத் தேர்ச்சியடைந்த போராளியான அவளைச் சண்டைக்கு விட்டு இழந்தால் அவளை மாதிரி இன்னொரு

மருத்துவப் போராளியை கற்பித்து பயிற்றுவித்து உருவாக்குவது கடினம் என்ற படியால் அவளது பொறுப்பாளர்

“இயக்கம் சொன்னதைத் தான் நீர் செய்ய வேண்டும்…

நீர் சொன்னதை இயக்கம் செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கக் கூடாது…

இயக்கத்திற்கு எங்க எங்க யார் யாரை எப்போது எந்த நேரத்தில விடவேண்டும் எண்டு தெரியும்…

அதுவரை இயக்கம் தந்த உம்மட வேலையைப் பாரும் ” என்று அகலின் கோரிக்கையைத் தட்டிக் கழித்தவாறே வந்தார்.

ஆனால் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்ற மாதிரி அகலின் தொடர் நச்சரிப்பால் அவளின் கோரிக்கையை ஏற்றுச் சிறிது காலம் போர் முன்னரங்குகளில் களமருத்துவப் பணியை மேற்கொள்ள அனுமதித்தார்.

அவளும் பெருமகிழ்வுடன் தன் கோரிக்கை நிறைவேறிய மகிழ்வுடன் தனது மருத்துவ முகாம் போராளிகளிடமிருந்து தற்காலிகமாக விடை பெற்றாள்.

காயப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக வந்திருந்த போராளிகளுக்கே தாயைப் போன்று பரிவு காட்டிய அவளது பிரிவு மிகவும் தாங்க முடியாதிருந்தது.

ஆனால் போராளிகள் என்றால் வலியும் பிரிவும் இழப்பும் சாதாரணம் தானே. அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டு கண்ணீருடன் அவளுக்கு விடை கொடுத்தார்கள்.

படையணிப் போராளிகளுடன் இணைந்து கடுமையான போர்ப் பயிற்சியினை எடுத்து நிறைவு செய்ததும் அவளும் போர் முன்னரங்கப்பகுதிக்கு அனுப்பப்பட்டாள்.

களத்திலேயும் அகலின் பணி காத்திரமானதாக அமைந்தது. பச்சைநிறச் சீருடையில் மிகப்பெரிய மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பையை

முதுகிலும் நெஞ்சில் கோல்சரும் குறுக்கே துப்பாக்கியையும் கொழுவியபடி வோக்கிடோக்கியையும் கையில் வைத்துக் கொண்டு மிடுக்கான நடையுடன் இன்முகத்துடனும் நேர் கொண்ட பார்வையுடனும் போர் முன்னரங்கப்

பகுதிகளில் காவலரண்களுக்கு அவள் சென்று வரும் போது பாரதி கண்ட புதுமைப் பெண்ணை நேரே கண்ட மாதிரி பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.

இராணுவத்தினரின் சினைப்பர் தாக்குதல்கள், எறிகணை வீச்சுகள், கிளைமோர் தாக்குதல்கள், கண்ணிவெடிகள்,

ஆழ ஊடுருவும் அணியினரின் தாக்குதல்கள் அனைத்திற்குள்ளாலும் தன்னுயிரையும் பொருட்படுத்தாது முன்னரங்குகளில் நிற்கும் போராளிகளுக்கு தேவைப்படும் மருத்துவ சிகிச்சைகளை வழங்கச் சென்று வருவாள்.

அப்படித்தான் ஓர்நாள் போர் முன்னரங்கிலே நிற்கும் ஒரு போராளிக்கு கடும் காய்ச்சல் அடிக்க மெயினில் நின்ற அவளுக்கு வோக்கி டோக்கியில் அழைப்பு வந்தது.

அகலும் அவளது உதவியாளரான இன்னொரு பெண் போராளியும் போர் முன்னரங்கப் பகுதிக்கு விரைந்து சென்றனர்.

ஏற்கனவே அந்தப் பகுதியில் இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என அறிவுறுத்தல் வந்திருந்தது.

மெயினில் நின்ற பொறுப்பாளர் அகலுக்கும் அவளுக்கு உதவியாகச் சென்ற மற்றைய போராளிக்கும் பாதுகாப்பாகச் சென்று வரக் கூறி ஏதும் உதவி

தேவைப்பட்டால் உடனே வோக்கி டோக்கியில் அறிவிக்கும்படியும் உடனே தயாராக நிற்கும் முறியடிப்பு அணியைத் தாம் அனுப்புவதாகவும் சொல்லி அனுப்பினார்.

காய்ச்சல் வந்த போராளிக்கு தேவையான மருத்துவ சிகிச்சையளித்து விட்டு அகலும் அவளது உதவியாளரும் மெயினை நோக்கித் திருப்பிச் சென்றுகொண்டிருந்தனர்.

வரும் போது பொறுப்பாளரினால் எச்சரிக்கை செய்யப்படிருந்ததனால் இருவரும் சுற்று முற்றும் அவதானமாகப் பார்த்துக் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தனர்.

அகலுக்கு வரும் போது இல்லாத ஏதோவொரு வித்தியாசம் தென்பட்டது. அதனைத் தனது உதவியாளராக வந்த போராளியிடம்

“கயல் எனக்கு வரும் போது இருந்ததை விட இப்போது ஏதோ ஒரு வித்தியாசம் தெரிகிறது என்று கூறினாள்.

அவளும் “ஓம் அக்கா எனக்கும் வித்தியாசம் தெரிகிறது என்றாள்” . ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போகின்றது என்று அகலின் உள் மனம் உணர்த்தியது.

அவர்கள் சென்று கொண்டிருந்த பாதையிலிருந்து அண்ணளவாக 200m தூரத்தில் திடீரென்று ஆட்காட்டிக் குருவிகள் கீச்சிட்டவாறு சிறகடித்துப் பறந்தன.

உடனே அகலும் மற்றைய போராளியும் எச்சரிக்கையாகி அருகில் நின்ற மரத்திற்குப் பின்னால் காப்பெடுத்தவாறு நிலமையினை அவதானித்தனர்.

சிறிது தூரத்தில் இலைகுழைகளால் உருமறைப்புச் செய்த தொப்பியணிந்த ஆறேழு இராணுவத்தினரின் தலைகள் தென்பட்டன.

அகல் தனது துப்பாக்கியைத் தயார்நிலையில் வைத்தபடி கயலுக்கும் துப்பாக்கியைத் தயார்நிலையில் வைக்கும்படி கூறிவிட்டு உடனே வோக்கியில்

மெயினிலுள்ள பொறுப்பாளருக்கு அருகில் உள்ள இராணுவத்தினருக்கு கேட்காத வகையில் நிலமையைத் தெரியப்படுத்தினாள்.

அவரும் அவர்கள் நிற்கும் இடத்தை தெளிவாகக் கேட்டு விட்டு இயன்றவரை சண்டையைத் தவிர்த்து தமது உதவி முறியடிப்பு அணி வரும்வரை பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தினார்.


அகலும் “சரியக்கா அப்படியே செய்கிறோம் ” என்று கூறிவிட்டுத் திரும்பும் போது அகலின் அசைவினை ஒரு ஆழ ஊடுருவும் இராணுவத்தினன் அவதானித்து விட்டு அவளை நோக்கிச் சுடத் தொடங்கி விட்டான்.

மிகவும் பாரமான மருத்துவப்பையினைத் தோளில் சுமந்தவாறு அகலும் மற்றைய போராளியான கயலும் மரங்களுக்கிடையே காப்பெடுத்தவாறு காப்புச்சூட்டை வழங்கியவண்ணம் நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

இராணுவ அணியிலோ ஏழு பேர் இருந்தார்கள்.

ஆனால் இங்கு அகலும் கயலும் மட்டும் தான். ஆனால் இருவருக்கும் எடுத்த கடும் பயிற்சி கைகொடுத்தது.

இருவரும் மனவுறுதியுடனும் ஓர்மத்துடனும் பதில் தாக்குதலை வழங்கிக் கொண்டிருந்தனர். இதற்கிடையில் உதவி முறியடிப்புத் தாக்குலணியினரின்

லீடர் அகலுடன் வோக்கியில் தொடர்பு கொண்டு தங்கள் அணி அருகில் வந்து விட்டது மனம் தளராது இருக்கும்படி தெரிவித்தார்.

மருத்துவப்பையுடன் மரத்துக்குப் பின்னே காப்பெடுத்து நின்று கொண்டிருந்த அகலினை இராணுவத்தினரின் பி.கே இன ரவை ஒன்று இடுப்பைத் துளைத்தவாறு உள்ளே புகுந்து நெஞ்சு வழியாக வெளி வந்தது..

இரத்தம் பெருக்கெடுத்தோட கீழே விழுந்தாள் அகல்.

அருகே இன்னொரு மரத்துக்குப் பின்னால் காப்பெடுத்து நின்றிருந்த கயல் இதனை அவதானித்து ஓடி வந்து அகலின் காயங்களுக்கு இரத்தம் வெளியேறாதவாறு பீல் கொம்பிரசை வைத்துக் கட்டினாள்.

இவர்கள் நின்ற இடத்தைக் குறிவைத்தபடி மூன்று இராணுவத்தினர் சுட்டவாறு முன்னேறி வந்து கொண்டிருந்தனர்.

இதனை அவதானித்த அகல் “என்னால முடியாமல் இருக்கு …

என்னைச் சுட்டுவிட்டு நீ தப்பிச் செல்” என்று கயலிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள்.

ஆனால் கயல் அதனை ஏற்றுக் கொள்ளாது “அகல் அக்கா இன்னும் கொஞ்ச நேரத்தில எங்கட அணி வந்திடும்….

அதுவரை கொஞ்சம் தாக்குப் பிடியுங்கோ…நான் அவங்களுக்கு டைவர்ட் காட்டி எதிர்ப்பக்கம் ஓடுறன்…

எப்படியாவது நீங்கள் தப்பிச் செல்லுங்கோ அக்கா…

உங்கட சேவை இயக்கத்துக்கு முக்கியம் தேவை..உங்களால் நிறையப் போராளிகளையும் மக்களையும் காப்பாற்ற முடியும்…

இயக்கம் உங்களை எவ்வளவு செலவளித்து படிப்பித்தது …அதற்கு பிரயோசனம் இருக்கோணும் ” என்று கூறியவாறு அகல் மறிக்க மறிக்க இராணுவத்தினரை நோக்கிச் சுட்டவாறு முன்னேறிச் சென்றாள்.

மூன்று இராணுவத்தினரின் கவனமும் கயலை நோக்கித் திரும்பியது. கயலின் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகி ஒரு இராணுவத்தினன் வீழ்ந்தான்.

மற்ற இரண்டு இராணுவத்தினரின் ரவைகளும் கயலின் உடலைத் துளைத்துச் செல்ல கயலின் உடல் அவள் நேசித்த மண்ணில் வீழ்ந்தது.

அவளின் இரத்தத்தால் அந்தமண் சிவந்தது.

இப்படித் தான் எத்தனையோ போராளிகள் தன்னலம் கருதாது நாட்டினதும் இயக்கத்தினதும் தேவையை உணர்ந்து தம்முயிரை ஈய்ந்துள்ளனர்.

பின்னர் போராளிகளின் உதவி முறியடிப்பு அணி அந்த இடத்தினை வந்தடைந்திருந்தது.

அவர்கள் இராணுவ ஆழ ஊடுருவும் அணிக்கு எதிரான தாக்குதலை நடாத்தி மிகுதி இராணுவத்தினரையும் கொன்றொழித்து அவர்களின் ஆயுதங்களையும் கைப்பற்றி காயப்பட்ட அகலையும் பின்னகர்த்தினர்.

அதன் பிறகு மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவ முகாமுக்கு அனுப்பப்பட்ட போதுதான் அங்கு இனியன் அகலைக் கண்டான்.

மருத்துவப் போராளிகளின் சிறந்த மருத்துவ சிகிச்சையும் பராமரிப்பும் அவளின் மனவுறுதியும் சேர்ந்து அகலின் காயங்களை வெகு விரைவில் குணமடையச் செய்தது.


பின்னர் தன்னைக் காப்பாற்றிய கயலின் அகலா நினைவையும் கனவையும் நெஞ்சில் சுமந்தவாறு தனது கற்கை நெறியைத் தொடர்ந்து நிறைவு செய்து

ஒரு முழுமையான போராளி வைத்தியராகத் திரும்பவும் கழுத்தில் மாலையாக ரெதஸ்கோப் அணிந்தவாறு இன்முகத்துடன் போராளிகளுக்கும் மக்களுக்குமான தாயகத்தின் தாயுமானவளாக அகல் தனது விடுதலைப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றாள்.

யாவும் கற்பனை அல்ல…

நிலாதமிழ்.சிறு கதைகள்