பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைகுழுவில் முறைப்பாடு

பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைகுழுவில் முறைப்பாடு
Spread the love

பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைகுழுவில் முறைப்பாடு

பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அச்சுறுத்துவதும் விசாரணைக்கு உட்படுத்துவதும் மனித உரிமை மீறல் எனச் சுட்டிக் காட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் பொலிஸாரின் இத்தகைய செயற்பாடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

மனித உரிமை ஆணைக் குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் நேற்று காலை இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

கடந்த வாரம் நடைபெற்ற யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டியின் இல்ல அலங்காரங்களில் மாணவர்களின் வெளிப்பாடுகள் தொடர்பாக தெல்லிப்பளை பிரிவு பொலிசார் மாணவர்களையும் ஆசிரியர்களையும் விசாரணைக்கு அழைத்தமையும் விசாரணைக்கு உட்படுத்தியமையும் அடிப்படை மனித உரிமைகளை மீறுகின்ற நடவடிக்கையாகும்.

இலங்கை அரசியலமைப்பின் சட்ட வரையறைக்குட்பட்டு கருத்தியல் ரீதியாகவும் கலை ரீதியாகவும் குறியீட்டு வடிவங்கள் மூலமாகவும் பாடசாலை மட்ட இல்ல விளையாட்டு போட்டி அலங்காரங்களில் மாணவர்களின் பாடசாலை மட்ட வெளிப்பாடுகள் இலங்கை அரசியலமைப்பில் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான சிந்தனை மற்றும் மனசாட்சி சுதந்திரத்திற்கு உட்பட்டதாகும்.

இத்தகைய சுதந்திரங்களை மதிக்காத மெல்லிப்பளை பொலிசாரின் அச்சுறுத்தல்களுடன் கூடிய விசாரணை செயற்பாடானது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதுடன் பாடசாலை நிர்வாகத்தினருக்கும் அடக்குமுறைகளை பிரயோகிக்கின்ற செயற்பாடுகளாகும்.

கல்வி செயற்பாடுகளில் தெள்ளிப்பளை பொலிசாரின் அவசியமற்ற நடவடிக்கைகள் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலையீட்டினை கோரியுள்ளனர்.

இதேவேளை தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் கடந்தவாரம் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது இல்ல அலங்காரங்களில் கவச வாகனங்கள் மற்றும் காந்தள் மலர் போன்ற தோற்றத்தில் அலங்காரம் செய்திருந்ததாக அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அழைத்து பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்.

இவ்வாறான நிலைமையிலே அதிபர் ஆசிரியர் மாணவர்களை விசாரணைக்கு உட்படுத்தியமை மனித உரிமை மீறல் எனவும் பொலிஸாரின் இத்தகைய அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.