புலிகளின் ஆஸ்தான மொழி பெயர்ப்பாளர் மரணம்

Spread the love

புலிகளின் ஆஸ்தான மொழி பெயர்ப்பாளர் மரணம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆஸ்தான மொழி பெயர்ப்பாளரான திருவாளர் வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் ஐயா நேற்றைய தினம் தனது 85வது வயதில் காலமாகி விட்ட செய்தி எல்லோரையும் போலவே எனக்கும் ஆழ்ந்த துயரை ஏற்படுத்தியுள்ளது.

மிகச்சிறந்த மொழி ஆளுமையும், சமூகம் மீதான அதீத அக்கறையும் கொண்ட அவருடன் தனிப்பட்ட ரீதியில் பழகிய நாட்கள் பசுமையானவை. தபால் அதிபராக இருந்து செவ்வனே தன் பணிகளை ஆற்றி ஓய்வு பெற்ற அவர், தன் பணி ஓய்வின் பின்னர் தான் சார்ந்த இனத்தின்

மீட்சிக்காக போராடிய தனிப்பெரும் இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆஸ்தான் மொழி பெயர்ப்பாளராக, சமாதான முயற்சிகளின் பங்காளனாக, போராளிகளுக்கு சிறந்த ஆங்கில ஆசானாக தனது பணியை ஓயாது தொடர்ந்தவர்.

இறுதிப்போரின் பின்னரான கடந்த ஒரு தசாப்த காலமாக, போரின் வடுக்களைத் தாங்கி, பொருளாதார நெருக்கடியால் கல்வியைத் தொடரமுடியாது தவித்த எத்தனையோ

மாணவர்களுக்கு, தனதும் தனது நண்பர்களின் ஆதரவோடும் கல்விக்கான மாதாந்த உதவிகளை வழங்கி அம் மாணவர்களின் கல்வி பயணத்திற்கு உதவி புரிந்த வண்ணமே இருந்தார்.

பஞ்சரட்ணம் என்ற தனது இயற்பெயரைக் கடந்து ஜோர்ஜ் மாஸ்டராகவே எம் எல்லோரது மனங்களிலும் நிறைந்திருக்கும் இவரது செயற்பாடுகள் எனக்கு ஆச்சரியமளிப்பதாகவும் மானிட வாழ்வு தொடர்பான சிந்தனையை தூண்டுவதாகவும் அமைந்திருந்தன.

உதாரணமாக ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறேன். ஒருநாள் தனது மருத்துவ தேவைக்காக பண்ணை வைத்தியசாலைக்கு சென்றவர் அங்கே காசநோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணியை கண்டு விசாரித்ததில் வடலியடைப்பைச் சேர்ந்த கணவனை இழந்த

அப்பெண்மணி மிகவும் வறுமைப்பட்டவர் என்பதையும், வறுமையினால் அவரது இரு குழந்தைகள் பாடசாலைக்கு கிரமமாக செல்வதில்லை என்பதையும் அறிந்து, தனது நோயுற்ற நிலைமையையும் பொருட்படுத்தாது பருத்தித்துறையிலுள்ள தனது வதிவிடத்திற்கு வந்து தேவையான கோரிக்கை

கடிதங்களை தயாரித்து, தானே நேரடியாக வடலியடைப்பிலுள்ள அப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று தேவையான ஆவணங்களையும் கையொப்பத்தையும் பெற்று அப்போது சமூக சேவை

அமைச்சின் செயலாளராக இருந்த திருமதி. இமெல்டா சுகுமார் அம்மையாருடன் தொடர்புகொண்டும் அப்போதைய ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் எழிலரசி அம்மையாரை

நேரடியாக சந்தித்தும் உடனடியாகவே குறித்த பெண்மணிக்கு ஒரு தொகை பணமும் பின்னர் மாதாந்த உதவு தொகையும் கிடைக்க வழி ஏற்படுத்தியிருந்தார்.

இத்தகு கருணையும், காருண்யமும் நிறைந்த மனப்பாங்குள்ள மனிதர்களை இன்றைய சமூகத்தில் காண்பது அரிது. தான் இப்பூவுலகில் வாழ்ந்த காலம் முழுமைக்கும் தன்னாலான

அரசியல், சமூக, கல்வி, மனிதநேயப் பணிகளை மானசீகமாக ஆற்றி, எம் எல்லோரது வாழ்வுக்கும் முன்னுதாரணமானவராக இருந்து, இறையடியில் இணைந்துகொண்ட ஐயாவின் ஆத்மா அமைதிபெற நாமும் பிரார்த்திக்கிறோம்.

சிவஞானம் சிறீதரன்
பாராளுமன்ற உறுப்பினர்,
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,
கிளிநொச்சி

    Leave a Reply