தத்து கொடுக்கப்பட்ட பெண் நெதர்லாந்தில் இருந்து வந்து தாயுடன் சந்திப்பு

தத்து கொடுக்கப்பட்ட பெண் நெதர்லாந்தில்
Spread the love

தத்து கொடுக்கப்பட்ட பெண் நெதர்லாந்தில் இருந்து வந்து தாயுடன் சந்திப்பு

23 ஆண்டுக்கு பின் கடல் கடந்து தத்து கொடுக்கப்பட்ட ஒரு குழந்தை இன்று குமரியாகி தாய் முன் நின்றால் அந்த தாயின் மனநிலை எப்படி இருக்கும்… ஆம்…இப்படி ஒரு நெகிழ்ச்சி சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

பிறந்த 40 நாளில் தத்து கொடுக்கப்பட்ட பெண் நெதர்லாந்தில் இருந்து வந்து தாயுடன் சந்திப்பு
23 ஆண்டுக்கு பின் தாயை கண்ட மகிழ்ச்சியில் அமுதவல்லி.
தாய்…

முதன் முதலாக நாம் பார்த்த தெய்வம்…பிறந்ததும் முதன் முதலாய் பார்த்த முகம்…ஆண்டுகள் கடந்தாலும் காட்டும் அளவற்ற பாசம்…நம் கண் கலங்கினால் துடிக்கும் ஒரே இதயம்…அன்பின் ஒட்டுமொத்த பிறப்பிடம்…

எத்தனையோ உறவுகள் இருந்தாலும் தாய்க்கு நிகர் யாரும் இல்லை எனலாம். அந்த தாய்க்கு உலகமே தன் குழந்தைதான். மகளோ, மகனோ யாராக இருந்தாலும் அவர்களுக்காக தன்னையே உருக்கிக்கொள்வாள் தாய்.

23 ஆண்டுக்கு பின் கடல் கடந்து தத்து கொடுக்கப்பட்ட ஒரு குழந்தை இன்று குமரியாகி தாய் முன் நின்றால் அந்த தாயின் மனநிலை எப்படி இருக்கும்…

ஆம்…இப்படி ஒரு நெகிழ்ச்சி சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா, பூசாரிப்பட்டி கிராமத்தில் உள்ள தாசசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் அமுதா (வயது 50). இவர் தர்மபுரி மாவட்டம் ஜகுரு பகுதியில் கணவர் ரங்கநாதனுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு ஜெனிபர், அமுதவல்லி ஆகிய 2 மகள்கள் பிறந்தனர்.

ரங்கநாதனின் முதல் மனைவிக்கும் குழந்தைகள் உள்ளனர். ரங்கநாதனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அமுதா குடும்பம் வறுமையில் வாடியது. இதையடுத்து காடையாம்பட்டி தாசசமுத்திரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார்.

அமுதவல்லி பிறந்ததும் அவரை வளர்க்க முடியாமல் அமுதா தவித்தார். இதனால் அந்த குழந்தையை தத்து கொடுக்க முன்வந்தார். இதையடுத்து அமுதவல்லி பிறந்த 11-வது நாளில் சேலத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ மி‌ஷனரியில் தத்து கொடுத்தார்.

அங்கு ஒப்படைக்கப்பட்ட அமுதவல்லியை 40-வது நாளில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் தத்தெடுத்தனர். பின்பு அந்த குழந்தையை தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்று வளர்த்து வந்தனர். நெதர்லாந்து பிரஜையாக அமுதவல்லி வளர்ந்தாள்.

அங்கேயே பள்ளிப்படிப்பை முடித்தாள். நாட்கள் ஓடின… 23 ஆண்டுகள் ஆன நிலையில் அமுதவல்லி வளர்ந்து பெரியவள் ஆனாள். தற்போது அமுதவல்லி நெதர்லாந்தில் அலங்கார பூச்செண்டு விற்பனை மையம் (பிளவர் ஷாப்) நடத்தி வருகிறார்.

நெதர்லாந்தில் பெற்றோரிடம் அளவற்ற பாசம் காட்டி வளர்ந்த அமுதவல்லிக்கு ஒரு சந்தர்ப்பத்தில் தனது பிறப்பின் ரகசியம் தெரிந்தது. தனது தாயகம் இந்தியா என்றும், குழந்தையாக இருக்கும்போதே தான் தத்து கொடுக்கப்பட்ட விவரத்தையும் அறிந்தார்.

இதை தொடர்ந்து அமுதவல்லி, பெற்றெடுத்த தாய் மற்றும் குடும்பத்தை பார்க்க விரும்பினார். கடந்த 2 ஆண்டுகளாக முகநூல், இன்டர்நெட் மூலம் தேடியும் பலன் கிடைக்கவில்லை.

அதனை அறிந்த வளர்ப்பு பெற்றோர்களே அவருக்கு உதவ முன் வந்தனர். பின்னர் அவரது தாயாரின் இருப்பிடத்தை தெரிவித்து நேரில் பார்த்து விட்டு வருமாறு வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

அதன்படி தனியொரு பெண்ணாக நெதர்லாந்தில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்த அமுதவல்லிக்கு மொழிப் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சென்னையில் உள்ள மொழிப்பெயர்ப்பாளர் ஒருவரது உதவியுடன் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள தாசசமுத்திரம் பகுதிக்கு வந்தார்.

அங்கு தனது வீட்டிற்கு சென்றார். அங்கு பாசத்தின் உருவமான தனது தாயை பார்த்தார். அந்த தாய்க்கு முதலில் தன் மகள் என்பதை அறியமுடியவில்லை. பின்பு அமுதவல்லி மொழிபெயர்ப்பாளர் மூலம் விவரத்தை கூறியதும் உணர்ச்சி பெருக்கில் கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். ஆனந்த கண்ணீர் வடித்தார்.

தனது தாயை நேரில் பார்த்த அமுதவல்லிக்கு கடவுளே நேரில் காட்சி கொடுத்தது போன்ற உணர்வு…அந்த சில நிமிடங்களில் பாசப்பெருக்கால் பனித்துளி போல கண்களில் கண்ணீர் கொட்டியது.

இதுகுறித்து அமுதவல்லி கூறும்போது, என்னை பெற்ற தாயை பார்த்தபோது ஏற்பட்ட சந்தோசத்திற்கு அளவே இல்லை. இவர்கள் காட்டும் அன்பும், பாசமும் நெகிழ வைக்கிறது என்றார்.

அவரது தாய் அமுதா கூறும்போது, 23 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவரின் குடிப்பழக்கத்தால் என்னை கைவிட்டுவிட்டார். வறுமையில் இருந்ததால் எனது குழந்தை வேறு எங்காவது நல்ல முறையில் வாழ வேண்டும் என்ற தத்து கொடுத்தேன்.

அதன்பிறகு எனது குழந்தையை நினைத்து அடிக்கடி வருந்துவதுண்டு. 23 ஆண்டுகளுக்கு பிறகு மகள் என்னை பார்க்க வருவாள் என நான் கனவிலும் நினைக்கவில்லை என்று தெரிவித்தார்.

    Leave a Reply