காவல்துறை அதிகாரி திடீர் இட மாற்றம்

Spread the love

காவல்துறை அதிகாரி திடீர் இட மாற்றம்

உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜா-எல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தேர்தல் சட்டங்களை மீறியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவால் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய நேற்று (16) பிற்பகல் கூடிய பொலிஸ் ஆணைக்குழு ஜா-எல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை பொலிஸ் தலைமையக்திற்கு மாற்ற தீர்மானித்துள்ளது.

எனவே, வெற்றிடமாகியுள்ள ஜா-எல பொலிஸ் நிலைய பொறுப்பதி பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்குமாறு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரையான காலப்பகுதியில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 3,377 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் மத்திய நிலையத்திற்கு 758 முறைப்பாடுகளும் மாவட்ட ரீதியான தேர்தல் மத்திய நிலையங்களுக்கு 2,619 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதேவேளை, அரசியல் கட்சி செயலாளர்களுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான எதிர்கால செயற்பாடுகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

குறிப்பாக தனிமைப்டுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அல்லது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளோருக்கு தமது வாக்குகளை அளிக்கும் வகையில் சந்தர்ப்பமளிப்பது குறித்து இதில் ஆராயப்படவுள்ளது.

இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்றும் இடம்பெறவுள்ளன.

பொலிஸ் நிலையம், இராணுவம், சிவில் பாதுகாப்பு திணைக்களம், மாவட்ட செயலாளர் காரியாலயங்கள் மற்றும் தேர்தல் செயலகம் ஆகியவற்றில் கடமையாற்றும் ஊழியர்கள் இன்று வாக்களித்து வருகின்றனர்.

மேற்குறித்த தினங்களில் தபால்மூலம் வாக்களிக்க தவறுவோர் எதிர்வரும் 20 ஆம், 21 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பமளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட தேர்தல்கள் செயலகத்தில் அவர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

      Leave a Reply