கடலுக்கு சென்ற மூவரை காணவில்லை

Spread the love

புத்தளம் கற்பிட்டி பகுதியிலிருந்து இயந்திரப் படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் இதுவரை கரைதிரும்பவில்லை என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (09) கற்பிட்டியிலிருந்து குறித்த படகில் சென்ற நிலையில் 10 நாட்களாக எவ்வித தொடர்புகளும் இன்றி தாங்கள் உள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.

கற்பிட்டி வன்னிமுந்தல் பகுதியைச் சேர்ந்த எம்.எஸ்.முஹம்மட் அலிகான் (வயது 26), முஹம்மட் நபீல் (வயது 45) மற்றும் கற்பிட்டி மணல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த நிசங்க (வயது 21)

திருமணமான மூன்று மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அந்த மீனவர்களின் குடும்பத்தினர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரும் இதுவரை கரைதிரும்பவில்லை என கற்பிட்டி பொலிஸ் நிலையத்திலும், கற்பிட்டி கடற்படை முகாமிலும் மூன்று மீனவர்களின் குடும்பத்தினர்களும் முறைப்பாடு செய்துள்ளதாக கூறினர்.

அத்துடன் கற்பிட்டி மீனவர்கள், பொதுமக்கள் ஆகியோரின் உதவியில் காணாமல் போன மூன்று மீனவர்களையும் தேடி வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த மீனவர்கள் பயணித்ததாக கூறப்படும் 7088 இலக்கமுடைய இயந்திப்படகு ஒன்று மன்னார் மாவட்டத்தின் பியர் பிரதேசத்திலுள்ள தீட தீவு பகுதியில் ஒதுங்கியுள்ளதாக

மன்னார் பொலிஸ் ஊடாக நேற்று (17) இரவு தகவல் கிடைத்துள்ளது என மீனவர்களின் உறவினர்கள் குறிப்பிட்டனர்.

எனினும் படகு மாத்திரமே இவ்வாறு கரையொதிங்கியுள்ளது எனவும் மீனவர்கள் தொடர்பில் தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் உறவினர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

இவ்வாறு மூன்று மீனவர்களும் காணாமல் போயுள்ளமை கற்பிட்டி பிரதேசத்தில் மீனவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

    Leave a Reply