கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது எப்படி? கருணாநிதிக்கு தெரியுமா

கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது எப்படி? கருணாநிதிக்கு தெரியுமா
Spread the love

கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது எப்படி? கருணாநிதிக்கு தெரியுமா

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடியும், திமுகவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆர்டிஐ மூலம் பெற்ற தகவல்கள் தான். இந்நிலையில் தான் ஆர்டிஐயில் அண்ணாமலை பெற்ற தகவல்களின் முக்கிய விபரங்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவு தற்போது இலங்கைக்கு சொந்தமாக உள்ளது. மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இருந்தபோது கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. தற்போது கச்சத்தீவு பிரச்சனையால் தமிழக மீனவர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் கச்சத்தீவை மீண்டும் இந்தியாவுடன் சேர்க்க வேண்டும் என தமிழக மீனவர்கள் நீண்டகாலமாக கூறி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் இன்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கச்சத்தீவு பற்றி பரபரப்பான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

அதில் ‛‛கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் எப்படி விட்டு கொடுத்தது என்பதற்கு புதிய ஆதாரம் கிடைத்துள்ளது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, நலன்களை பலவீனப்படுத்துவதே காங்கிரஸின் 75 ஆண்டு கால செயல்திறனாக உள்ளது. காங்கிரஸை எப்போதும் நம்பக்கூடாது என்று மக்கள் மனதில் உறுதியான நம்பிக்கை உள்ளது. கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியர்கள் ஒவ்வொருவரையும் காங்கிரஸ் கோபத்தில் ஆழ்த்தி உள்ளது” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் இந்த பதிவுக்கு தமிழக பாஜக தலைவர் ஆர்டிஐ மூலம் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது தொடர்பான தகவல்களை பெற்றிருப்பது தான் காரணம். அண்ணாமலை பெற்றுள்ள தகவலில், ‛‛முன்னாள் பிரதமர் நேரு1961 மே 10ம் தேதி கச்சத்தீவுக்கு நான் எந்த முக்கியத்துவமும் தரவில்லை. அதற்கான உரிமையை விட்டு தயங்கமாட்டேன் என பேசியுள்ளார். கச்சத்தீவுக்கு இந்தியா உரிமை கொண்டாட வாய்ப்பு உள்ளதாக அப்போதைய அட்டர்னி ஜெனரல் எம்சி செடல்வாட் 1960ல் கூறியிருந்தாலும் கூட நேருவின் முடிவு எதிர்மாறாக இருந்தது.

மேலும் 1973ல் இந்தியா-இலங்கை வெளியுறவுத்துறை செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை கொழும்பில் நடந்தது. இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை அப்போதைய வெளியுறவுத்துறை செயலாளர் கேவால் சிங் தெரிவித்தார். அப்போது ராமநாதபுரம் ராஜாவிற்கு கச்சத்தீவு உரிமை உள்ளது என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

மேலும் இலங்கை ஜனாதிபதி சிறிமாவோ, டெல்லி வந்து இந்திரா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பேச்சுவார்த்தையின் முடிவில் மத்திய அரசு தன்னிச்சையாகவே கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு 1974ல் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது” என்ற விபரங்கள் உள்ளன.

இந்த தகவல் தான் தற்போது பூதாகரமாகி உள்ளது. இதுதொடர்பான செய்தியை குறிப்பிட்டு தான் பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுகவை சாடியுள்ளார். இதுதொடர்பாக நிர்மலா சீதாராமன், ‛‛தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் கேள்விக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலமாக உண்மை. கச்சத்தீவு கைமாறியது காங்கிரஸ் ஆட்சியில் 1976ல். இதை பற்றிய முழு விபரம் 1974ஜுன் மாதம் அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் தெரிவிக்கப்பட்டது.

இன்று வரை கச்சத்தீவு பற்றி உண்மைக்கு புறம்பாக பிரச்சாரம் செய்து வரும் ஆளும் கட்சி திமுக இதற்கு பதிலளிக்க வேண்டும். கச்சத்தீவை காங்கிரஸ் கட்சியுடன் சேர்த்து தாரை வார்த்துவிட்டு, பிறரை கேள்வி கேட்கும் போக்கு மிகவும் தவறு” என கூறியுள்ளார்.

கச்சத்தீவை மீட்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும் சமீபத்தில் கூட முதல்வர் ஸ்டாலின் கச்சத்தீவு மீட்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இத்தகைய சூழலில் இந்த தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு லோக்சபா தேர்தலின்போது கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாகும். அந்த வகையில் தான் தற்போதும் கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாகி உள்ளது.