எனக்காய் பிறந்தாள் இவள்
மயக்கும் இரவில் மாளிகை ஒன்றில்
மணக்க வந்த குயிலே – அடி
உயிர் கசங்கா நெஞ்சில் உன்னை சுமந்தேன்
உள்ளம் நீயே மகிழ்வாய் …..
இத்தரு திங்கள் உன்னை ஈர்ந்தார்
இதயம் மகிழ நன்றி ……
பத்தொரு திங்கள் பாடாய் சுமந்தார்
பலனை தின்றேன் நன்றாய் …..
வைத்தொரு பேரை சூடியுன்னை
வளர்த்தே நின்றார் கண்ணாய்…..
இடையில் வந்தா னொருவன் – உனை
இதயம் வைத்தான் பேறாய்……
விதியின் விளைச்சல் இது தானென்றே
விலகி நின்றார் பாராய் …..
அகிலம் படைத்த ஆண்டான் செயலின்
அழகை இதிலே காண்பாய் …..
ஈர் உடல் ஒன்றாய் நீயும் தானே
இணைந்து போனாய் வாழ்வில் …..
முத்தாய் இரண்டை முன்னே தந்தாய்
முத்தே உனக்கு நன்றி ……
எனக்காய் பிறந்தாள் இவள்
இடையில் சில நாள் இதயம் மாறி
இடரை தந்தேன் நன்றாய் ….
இருந்தும் நீயே இதனை மறந்து
இதயம் காத்தாய் பண்பாய்…..
கருவரை பிளந்து கண்ணை திறந்த
கண்ணே இந்த நாளாம்-
நெஞ்ச மலரால் நினைவை தூவி
நினைந்தேன் உன்னை நானாம் ….
பேறாய் உன்னை பெற்றது எண்ணி
பெருமை கொண்ட நாளாம்…..
கட்டியே தழுவி உன்னை இன்று
கத்தியே பாடுது நன்றாம் …
என்ன தந்தால் நீயும் சிரிப்பாய்
எனக்கு புரியவில்லை – என்
எண்ணம் தந்தேன் பரிசாய் தானே
எடுத்தே நீயும் இரசிப்பாய் ….
கன்னம் இரண்டில் காயம் வைப்பேன்
கண்ணே கொஞ்சம் வாராய் – என்
கடமை தன்னை முடிக்க தானே
கண்ணே நீயும் தாராய்……
பணத்தை தந்தேன் இது நாள் வரையில்
பாதியில் தொலைத்து நின்றாய் -உன்னை
பாடி வைத்தேன் இன்று தானே
பாவி எங்கோ தொலைப்பாய்….?
விண்ணை கட்டி நூலால் இழுப்பேன்
வித்தகி இருந்தால் போதும் – நீ
பிறந்த நாளில் உன்னைபாடி
பிரியம் தந்தேன் பாராய் ….!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -13/09/2017
இதயம் நுழைந்து இனிதே இனைந்தஇவளது பிறந்த நாளில்