யாழில் ரெலோ வேட்பாளரை வெல்ல வைக்க சுமந்திரனுக்கு எதிராக களம் இறங்கிய ரெலோ: சுமந்திரனை போட்டு தாக்கும் ரெலோ முக்கிய உறுப்பினர்

Spread the love

யாழில் ரெலோ வேட்பாளரை வெல்ல வைக்க சுமந்திரனுக்கு எதிராக களம் இறங்கிய ரெலோ: சுமந்திரனை போட்டு தாக்கும் ரெலோ முக்கிய உறுப்பினர்

யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தேர்தலில் போட்டியிட்டுள்ள ரெலோவின் வேட்பாளர் சுரேன் அவர்களை வெற்றி பெறச் செய்வதாக ரெலோ தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதனடிப்படையில் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் முன்னிலையில் சுமந்திரனுக்கு எதிரான பிரச்சாரத்தை அதன் முக்கிய உறுப்பினரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான செந்தில்நாதன் மயூரன் ஆரம்பித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரது விசனத்தனமான பேச்சால் தமிழ் தேசிய கூட்டமைப்பை புறம்தள்ளி விடக்கூடாது. யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனது கருத்துக்கள் தமிழ் மக்களின் மனதை புண்படுத்துவதாக இருக்கின்றது. விடுதலைப்புலிகள் சகோதர படுகொலைகளை செய்துதான் தனி இயக்கமாக உருவாகினார்கள் என அவர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் இன்று சுமந்திரன் இருக்கின்ற கட்சியும் சகோதர கட்சிகளை புறம்தள்ளி ஐந்து கட்சிகளாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை மூன்று கட்சிகள்தான் இருக்கின்ற நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். இதில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ஒன்று மட்டும்தான் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை இருக்கின்ற கட்சியாகும். இந்நிலையில் இடையில் வந்த சிலரது கருத்துக்கள் காரணமாகவும் கொள்கை ரீதியான நிலைப்பாடுகள் காரணமாகவும் மற்றவர்கள் பிரிந்து சென்று விட்டார்கள்.

இந்நிலையில் நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை நிராகரித்து விடக்கூடாது. தான் சொல்வது சரி தான் நினைப்பது சரி. தான் இலங்கை அரசாங்கத்துடன் உறவாடுவது சரி என சுமந்திரன் நினைத்துக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளர்களும் அவர் கதைப்பது சரியா பிழையா என உணர்ந்து கொள்ள வேண்டும். யாழ் மாவட்ட மக்கள் வாக்களிப்பதில் இருந்து அவர் தான் கதைத்தது சரியா, பிழையா என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

Leave a Reply