மக்கள் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேலைத்திட்டம் ஆரம்பம்- கூவும் அரசு

Spread the love

மக்கள் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேலைத்திட்டம் ஆரம்பம்- கூவும் அரசு

பொருளாதாரத்தின் உரிமையை மக்கள் அடைந்துகொள்ளும் மக்கள் மைய பொருளாதார பொறிமுறை ஒன்றுக்காக இம்முறை இராஜாங்க அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பட்டார்.

இராஜாங்க அமைச்சுக்களின் விடயதானங்கள் குறித்து மீளாய்வை ஆரம்பிக்கும் வகையில் நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

பத்திக், கைத்தரி, ஆடைகள் மற்றும் உள்நாட்டு ஆடைக் கைத்தொழிலுக்காக இராஜாங்க அமைச்சொன்றை உருவாக்குவதற்கான காரணங்களை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொவிட் 19 காரணமாக பாரிய சிக்களுக்கு ஆளாகியுள்ள ஏனைய நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்தாது முன்னோக்கி செல்ல முடியாது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஆடைக் கைத்தொழில் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 43 வீதத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றது. இதன் மூலம் ஏற்றுமதி வருமானத்துக்கு வருடாந்தம் 05 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெறுகின்றது. தொழில் வழங்கும்போதும் மற்றும் பிரதேச அபிவிருத்தியின் போதும் ஆடைக் கைத்தொழில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றது. அதனை வலுப்படுத்தும் முகமாக பத்திக் மற்றும் கைத்தறி உட்பட உள்நாட்டு ஆடை உற்பத்தியை மேம்படுத்துவது அரசின் பிரதான நோக்கம் என்று ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

பத்திக் மற்றும் கைத்தறி கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் செயற்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

அதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் ஆடை உற்பத்தியாளர்களுக்கு ஒரு ஸ்திரமான நிலையை ஏற்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

‘சலுசல’ போன்ற நிறுவனங்கள் மூலம் பத்திக் மற்றும் கைத்தறி ஆடை உற்பத்தியாளர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் பி. பீ.ஜயசுந்தர, திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். ஆடிகல ஆகியோர் உள்ளிட்ட பத்திக், கைத்தறி ஆடை, உள்நாட்டு ஆடைக் கைத்தொழில் சார்ந்த நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Leave a Reply