புதிய கல்வி முறைமை அவசியம் ரணில் விக்கிரமசிங்க

ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்
Spread the love

புதிய கல்வி முறைமை அவசியம் ரணில் விக்கிரமசிங்க

நாட்டை பொருளாதார மாற்றத்திற்கு இட்டுச் செல்வதற்கு, உலகத்திற்கு உகந்த வகையிலான புதிய கல்வி முறைமை அவசியமானது எனவும், அதன் மூலம் போட்டி நிறைந்த உலகச் சந்தைக்குத் தேவையான துறைசார் நிபுணர்களை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க சுட்டிக்காட்டினார்.

பரீட்சை சுமையை குறைத்து, ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை கல்வி முறையில் உள்ளடக்கி, தொழிலுக்கு ஏற்றவகையிலான மாணவர்களை உருவாக்க எதிர்பார்ப்பதாகவும், புதிய தொழிற்கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொள்ளுப்பிட்டி புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரியில் இன்று (14) பாடசாலை மாணவ, மாணவிகளுக்கான இலவச பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் இந்த நிகழ்வுடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் உள்ள 10,126 பாடசாலைகள் மற்றும் 822 பிரிவெனாக்களின் பிக்கு மாணவர் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோருக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படும்.

இதன்போது அடையாரீதியாக, பிக்கு மாணவர் மற்றும் பாடசாலை மாணவர்கள் சிலருக்கு சீருடைகள் மற்றும் பாடசாலை பாடப்புத்தகங்கள் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.

புதிய கல்வி முறைமை அவசியம் ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரியின் அதிபர் ஏன் கிறிஸ்டீன் நினைவுப் பரிசை வழங்கி வைத்தார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,

எனது வீட்டிற்கு அருகில் ஐந்து பாடசாலைகள் உள்ளன. நான் கற்ற றோயல் கல்லூரி மற்றும் தேர்ஸ்டன் கல்லூரி, மகளிர் கல்லூரி, மகாநாம கல்லூரி மற்றும் புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரி என்பனவே அவை. அதனால் எனக்கு கல்வித்துறையில் அதிக கவனம் செலுத்த முடிந்துள்ளது. ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் இப்பாடசாலைகளின் அபிவிருத்தியில் கவனம் செலுத்தினோம்.

2022 இல் நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால், கல்வித் துறை மட்டுமல்ல, அனைத்துத் துறைகளும் சரிவைச் சந்தித்தன. பாடசாலை பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்க முடியவில்லை. அந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க எந்த தலைவரும் முன்வரவில்லை. அப்போது, சவாலை ஏற்று, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டத்தை ஆரம்பித்தேன்.

இந்த பொருளாதார வேலைத்திட்டத்தினால் இன்று நாடு ஓரளவு பொருளாதார ஸ்திரத்தன்மை பெற்று வருகின்றது. அதன்படி, பாடசாலை சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்களை உரிய நேரத்தில் வழங்க அரசாங்கத்தினால் முடிந்துள்ளது. அதற்காக 14 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை செலவிடப்பட்டது.

கல்வி மறுசீரமைப்பின் ஊடாக நாட்டில் புதிய கல்வி முறையொன்றை உருவாக்க வேண்டும். உலகிற்கு பொருத்தமான தொழில் படையினை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்த வேண்டும். நாட்டில் பொருளாதார புரட்சியை ஏற்படுத்துவதற்கு கல்வி முறையை உலகிற்கு பொருத்தமான வகையில் மாற்றியமைக்க வேண்டும். அதன் மூலம் உலகிற்கு தேவையான தொழில் படையினை உருவாக்க முடியும்.

அதனூடாக சர்வதேச சந்தையுடன் போட்டியிடும் வாய்ப்பு எமக்கு கிடைக்கும். பரீட்சைகளின் சுமைகளை குறைத்து ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை கல்வி முறையில் உள்வாங்கி தொழில் முறைகளுக்கு உகந்த சமூகத்தை உருவாக்க எதிர்பார்க்கிறோம். அதற்காக தொழில், தொழில்நுட்பக் கல்லூரிகளை உருவாக்கவும் எதிர்பார்க்கிறோம்.

நாம் எவரும் 2022 இல் இருந்த நிலைக்குச் செல்வதை விரும்பவில்லை. எரிவாயு, எரிபொருள் உணவு வரிசைகள் அற்ற சமூகமே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். எனவே அவ்வாறான யுகத்திற்குள் மீண்டும் நாடு செல்லாமலிருக்க வலுவான பொருளாதாரத்தை நாம் உருவாக்குவோம். வலுவான பொருளாதாரம் கொண்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தினை நாம் ஆரம்பித்துள்ளோம். என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த,

இந்த தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக 09 மாகாணங்களின் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலை சீருடை மற்றும் பாடப்புத்தங்கள் இன்று வழங்கப்படுகின்றன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் கல்வித்துறையின் நான்கு பிரிவுகளை ஒரு அமைச்சின் கீழ் கொண்டு வந்து மனித வளத்தை முகாமைத்துவம் செய்து மாணவர்களுக்கு முறையான கல்வியை வழங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்தினார்.

இன்று வழங்கப்படும் பாடசாலை சீருடையில் 80% சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாகும். எஞ்சிய 20% சதவீதம் இலங்கை அரசாங்கத்தின் செலவில் பெற்றுகொடுக்கப்பட்டது.

இந்திய கடன் உதவியில் கிடைத்த கடதாசியை கொண்டு பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. அதனால் உரிய தினத்தில் பாடப்புத்தங்களை அரசாங்கத்தினால் வழங்க முடிந்துள்ளது. அரச அச்சீட்டு பணிகளில் இலாபம் ஈட்டவும் முடிந்துள்ளது. அனைத்து பாடசாலைகளினதும் மாணவர்களுக்கும் சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை வழங்க அரசாங்கம் 19 பில்லியன்களை செலவிடுகிறது.

கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக தாமதமாகிவரும் சாதாரண தர பரீட்சைகளை 2025 ஆம் ஆண்டிலிருந்து உரிய காலப்பகுதியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் கல்வி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதி பெரும் பங்களிப்பு வழங்குகிறார். உலகிற்கு பொருத்தமான வகையில் கல்வி முறையை மாற்றியமைக்க அவர் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார். இந்த அனைத்து வேலைத்திட்டத்துடனும் உலகை வெல்லக்கூடிய சமூகத்தை கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும்.

கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார், பாராளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தன, மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் தி எயார் ரொஷான் குணதிலக்க,கல்வி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, கல்வி வெளீயீட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.தாஜூதீன் உள்ளிட்டவர்களுடன் சென். புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.