இந்திய – இலங்கை இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு நெருக்கம்

Spread the love

இந்திய – இலங்கை இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு நெருக்கம்

இலங்கை மற்றும் இந்திய நாடுகளிடையிலுமான நிரப்பு பொருளாதார பலத்தினை உரிய முறையில் பயன்படுத்துவதற்கான பொருளாதார பாதுகாப்பினை சமநிலைப்படுத்தும் வகையில் எதிர்காலத்துக்கான கொள்கைகளை வகுக்கவேண்டியதன் அவசியத்தை இன்றைய நிலை தோற்றுவித்திருப்பதாகவும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கை இடையிலான பொருளாதார ஒத்துழைப்பினை வலுவாக்குதல்

“இந்தியா இலங்கை இடையிலான பொருளாதார ஒத்துழைப்பினை வலுவாக்குதல்” என்ற தலைப்பில் 2020 ஜூலை 21 ஆம் திகதி நடைபெற்ற மெய்நிகர் கருத்தரங்கு ஒன்றில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே அவர்கள் உரை நிகழ்த்தினார். சர்வதேச உறவுகள் மற்றும் தந்திரோபாய கற்கை நெறிகளுக்கான லக்‌ஷ்மன் கதிர்காமர் நிலையம் (LKIIRSS) மற்றும் இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சங்க சம்மேளனம் (FICCI) ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த மெய்நிகர் கருத்தரங்கு இடம்பெற்றிருந்தது.

  1. வெளிவிவகார அமைச்சின் செயலர் ரவிநாத ஆரியசிங்க மற்றும் FICCI தலைவர் டாக்டர்.சங்கிதா ரெட்டி ஆகியோர் FICCI மற்றும் LKIIRSS ஆகிய நிறுவனங்களின் சிரேஸ்ட அதிகாரிகள் என்ற அடிப்படையில் கலந்துகொண்டிருந்த அதே சமயம் இலங்கை முதலீட்டுச் சபை, சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பணியகம், மற்றும் நனோ தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இந்த கருத்தரங்கில் பங்கேற்றிருந்தனர்.
  2. இங்கு உரை நிகழ்த்தியிருந்த உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்கள், இலங்கை மற்றும் இந்தியா இடையிலான பரந்த உறவு குறித்து கருத்துக்களை தெரிவித்திருந்த அதேசமயம் கொவிட் 19 நோய் காரணமாக முன்னொருபோதும் இல்லாதவகையில் ஏற்பட்டுள்ள சவால்களை வினைத்திறனுடனும் துரிதமாகவும் எதிர்கொள்வதற்கு தேவையான இருதரப்பு ஒத்துழைப்பினை மேலும் விரிவாக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டினார். இரு நாடுகளிடையிலுமான நிரப்பு பொருளாதார பலத்தினை உரிய முறையில் பயன்படுத்துவதற்கான பொருளாதார பாதுகாப்பினை சமநிலைப்படுத்தும் வகையில் எதிர்காலத்துக்கான கொள்கைகளை வகுக்கவேண்டியதன் அவசியத்தை இன்றைய நிலை தோற்றுவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  3. உட்கட்டமைப்பு, சக்தி வலு, தொடர்பாடல், தகவல் தொழில்நுட்பம், விவசாயம், உற்பத்தி, மருந்து துறை, சுற்றுலாத்துறை மற்றும் கல்வி ஆகிய துறைகளில் சிறந்த முறையில் ஒத்துழைப்பினை மேற்கொள்ளமுடியும் எனவும் உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே அவர்கள் சுட்டிக்காட்டினார். இந்த துறைகளிலும் பரஸ்பரம் நன்மை தரக்கூடிய ஏனைய துறைகளிலும் ஸ்திரமான ஈடுபாடு எதிர்பார்க்கக்கூடியதும் உறுதியானதுமான கொள்கைத் தோற்றப்பாடுகளின் உந்துதலுடனான வளமான சூழலை உருவாக்கும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார். அது மட்டுமல்லாமல் வர்த்தக ரீதியிலான வலுவான உறவைக் கொண்டிருக்கும் இரு நாடுகளிடையில் பரந்தளவிலான நீண்டகால உறவினை கட்டி எழுப்புவது ஆளுமை விருத்தி, வேலை வாய்ப்பு மேம்பாடு மற்றும் சிறப்பான எதிர்காலம் ஆகியவற்றுக்கான வாய்ப்புக்களை உருவாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  4. கொவிட் 19 காரணமாக ஏற்பட்டிருக்கும் சகல சவால்களுக்கு மத்தியில் பொருளாதார மீட்சியின் முக்கியத்துவம் தொடர்பாக இங்கு கருத்துக்களை தெரிவித்திருந்த வெளிவிவகார செயலர் ரவிநாத ஆரியசிங்க, எதிர்காலத்தினை வடிவமைப்பதற்கான தற்போதைய ஒத்துழைப்புக்கள் மற்றும் கடந்தகால வெற்றிகளில் இரு தரப்பும் கவனம் செலுத்தவேண்டிய அவசியம் தொடர்பாகவும் சுட்டிக் காட்டினார்.
  5. மருந்துத்துறை, விவசாயம், உற்பத்தி துறை, தொடர்பாடல், சுற்றுலாத்துறை மற்றும் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் ஆகிய துறைகளில் காணப்படும் வாய்ப்புக்கள் தொடர்பாகவும் இரு தரப்பையும் சார்ந்த துறைசார் நிபுணர்கள் இங்கு சுட்டிக்காட்டியிருந்தனர். அத்துடன் துறை சார் செயல் புள்ளிகள் உரிய முறையில் பின்பற்றப்படுமெனவும் இந்த கருத்தரங்கில் இணங்கப்பட்டது.

Leave a Reply