வாயுவில் இருந்து வோட்கா தயாரிக்கும் அமெரிக்க நிறுவனம்
பசுமை இல்ல வாயுக்களில் முக்கியமானவை கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவை. வாகனங்கள் வெளியிடும் புகை, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு, குளிர்சாதன பெட்டி மற்றும் ஏசி பயன்பாடு, குப்பைகள் மற்றும் கழிவுகளை மறுசுழற்சி செய்யாமை போன்றவற்றின் காரணமாக இந்த வாயுக்கள் வெளியாகின்றன.
இந்த வாயுக்களின் அளவு அதிகரித்தால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும். அதனால் உயிரினங்கள் அழியும். துருவப்பகுதிகள் உருகத் துவங்கும். எங்கும் பனியே இல்லாமல் தண்ணீராக மாறும். நிலப்பகுதிகள் பெரும்பாலும் தண்ணீருக்குள் மூழ்கும்.
உலகின் பல்வேறு நாடுகள் பருவநிலை மாற்றங்கள் குறித்தும் இயற்கையை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை குறித்தும் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த மதுபானம் தயாரிக்கும் நிறுவனம், கார்பன் டை ஆக்சைடு மூலம் வோட்கா மதுபானம் தயாரிக்கும் வழிமுறையை கண்டறிந்துள்ளது.
ஏர் கோ நிறுவன தயாரிப்பு
வோட்கா மதுபானம் பொதுவாக சோளம், உருளைக்கிழங்கு மற்றும் கோதுமை போன்ற தானியங்களில் இருந்து நொதித்தல் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதனால் ஒரு பாட்டிலுக்கு 13 பவுண்டுகள் அளவிற்கு பசுமை இல்ல வாயுக்கள் வெளியாகின்றன. ஆனால், வழக்கமான நொதித்தல் செயல்முறையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஏர் கோ இயந்திரங்கள் சூரிய சக்தியில் இயங்கி, நீர் மற்றும் கார்பன்டை ஆக்சைடை எத்தனாலாக மாற்றுகின்றன.
தாவரங்களின் ஒளிச்சேர்க்கை செயல்பாடே எங்களது இந்த தயாரிப்புக்கு உத்வேகமாகும். பசுமை இல்ல வாயுக்களின் மூலம் மதுபானம் தயாரிக்கப்படும் இந்த செயல்முறை சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நிச்சயம் ஒருநாள் உதவும் என அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்போதைக்கு, அவர்களின் வோட்கா நியூயார்க் நகரின் சில உணவகங்களுக்கு ஒரு பாட்டில் 65 டாலர் விலையில் விநியோகிக்கப்படுகிறது.