எழடா சாதிக்க நீ தான் அமெரிக்கா …!

Spread the love

எழடா சாதிக்க நீ தான் அமெரிக்கா …!

கண்டாவளை திருவையாறு
கனக ராயன் குளமும்
முட்டி மோதி ஓடி வரும்
முல்லைத்தீவு தேடி வரும்

வட்டக்கச்சி கொம்படியும்
வளைந்து செல்லும் ஊரியானும்
தட்டி மறிக்கும் தட்டுவன் கொட்டியும்
தண்ணீர் ஊற்றும் வழிமறிக்கும்

முரசுமோட்டை சேற்றுக்கண்டி
மூன்றாம் கட்டை நான்காம் கட்டை
வெலிகண்டன் சந்தியில
வேகம் பிடிக்கும் வேலி பிரிக்கும்

இரணை மடுவும் இன்று வரவும்
இளைப்பாறும் இளம் வாய்க்காலும்
ஊர் சுற்றி பார்க்கும்
ஊர்ந்து வரும் நீரும்

இயற்கை வாழும் ஊரு வன்னி மண்ணு
இளைப்பாற நீயும் வா கண்ணு
எங்க ஊரை போல எந்த ஊரு வருமோ
எங்கள் வாழ்வு எங்கு கூடுமோ

கட்டி வைத்த குளமும்
கட்டு டைத்து பாயும்
வந்து பார்த்து ஆடு
வயல் இறங்கி ஓடு

கிரவல் வீதியெல்லாம்
கிழிந்து போச்சுது
தாரு போட்ட வீதியில
தவழ்ந்து பார்த்து ஓடுது

வளர்ச்சி இங்கே நல்லாய் இருக்கு
வாழும் மனிதர் வறண்டிருக்கு
அறியாமை ஓட அறிந்த கொள்ளா வாடா
ஏற்றம் இங்கு ஏறவில்லை
ஏழ்மை இன்னும் ஓடவில்லை

வீட்டுக்குள்ள உழைப்பை வைத்து
வீதியில ஏங்கி நிற்கு
புத்தி கெட்ட மனிதராலே – தேசம்
நித்திரையாய் கிடக்கு

தன்னில் தான் தங்கி வாழும்
தன்னிறைவு வருமா
வெள்ளையர் நாடு போல – வாழும்
வெற்றி முளைக்குமா

அகதி தமிழன் பணத்தில் வாழும்
அழிதல் ஒழியுமா
தன் உழைப்பில் தான் வாழும்
தலை நிமிர்வு ஓங்குமா

உனக்குள் இன்று உன்னை தேடு
உலகை இன்று புரட்டி போடு
புரட்சி வெடிக்கும் புழுதி உழவடிக்கும்
எழடா சாதிக்க நீ தான் அமெரிக்கா …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 04-03-2022

    Leave a Reply