இன்னுமொரு மியன்மாரை உருவாக்க வேண்டாம்-முசுலீம்கள் கூவல்

Spread the love

இன்னுமொரு மியன்மாரை உருவாக்கிவிடவேண்டாம் என்று எல்லோரும் கூறி வருகின்றார்கள். நான் கூறுகின்றேன் இன்னுமொரு மியன்மார் அல்ல நாம் மியன்மாரில்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இதிலிருந்து நாம் விடுபடவும், எமது சிறுபான்மை சமூகத்தை பாதுகாப்பதற்காகவும் அன்னம் சின்னத்தை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொத்துவில் பிரதேச சபையின் உறுப்பினர் முன்னாள் உதவித் தவிசாளர் ஏ.எம்.எம்.தாஜுதீன் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேச அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழு ஏற்பாட்டில் புதிய ஜனநாயக ஐக்கிய முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்த செய்தியாளர் சந்திப்பு நேற்று (03) அறுகம்பே தனியார் விடுதியில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட கிழக்கிலுள்ள சிறுபான்மையினரை நன்றாக புரிந்து கொண்டுள்ள வேட்பாளர் என்றால் அது சஜீத் என்கின்றவராவார். நாட்டின் தலைமகனாக வருவதற்கான சகல தகுதியும் அவருக்குண்டு. அவரின் தகப்பனார் காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் வழிகாட்டலின் கீழ் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டவர் என்றால் அது மிகையாகாது.

1990 ஆண்டு காலப்பகுதியில் பொத்துவில் பகுதிக்கு அரசியல்வாதிகள் மட்டுமல்ல பொதுமக்களும் வருவதற்கு பயந்துகொண்டிருந்த அந்த அசாதாரண காலங்களில் ரணசிங்க பிரேமதாச என்கின்ற எமது நாட்டின் தலைமகன் பொத்துவில் பிரதேச மக்களை சந்தித்து அவர்களுக்கான இலவச மின்சார இணைப்பை வழங்கி பொத்துவில் பிரதேசத்துக்கு ஒரு வெளிச்சத்தை வழங்கிய ஒரு தைரியமானவர் என்பதை எமது பொத்துவில் மக்கள் எவரும் எளிதில் மறந்து விடவில்லை, மறந்து விடவும் மாட்டார்கள் என நான் நம்புகின்றேன்.

ஜனாதிபதி வேட்பாளராக அவருடைய மகன் சஜித் பிரேமதாச இன்று களமிறங்கியுள்ளார். அவரின் தந்தை விட்டுச் சென்ற சேவைகள் எங்கு நிறுத்தப்பட்டதோ அந்த இடத்திலிருந்து அந்த சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காகவேதான் அவர் ரணசிங்க பிரேமதாசவின் பாதணிகளை அணிந்து அவரைப் போன்றே ஆடைகளையும் அணிந்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில்தான், சிறுபான்மை மக்களாகிய முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. இனவாத கருத்துக்களையும், தாக்குதல்களையும் மேற்கொள்ளும் மாபெரும் இனவாத முகவர்களான உதய கம்மன்வில, ரத்ண தேரர், ஞானசார தேரர், கருணா அம்மான், பிள்ளையான் போன்ற அனைத்து இனவாத குழுக்களும் ஒன்றாக இணைந்துள்ள கட்சியாகவே தான் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி காணப்படுகின்றது என்பதை எமது சிறுபான்மையான சமூகம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது என்பதை நான் இந்த இடத்தில் ஞாபகமூட்ட விரும்புகின்றேன் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சஜீத் பிரேமதாசவை ஜனாதிபதியாக கொண்டு வரவேண்டும் என்பதற்காக தனித் தனியாகவும், குழு குழுவாகவும், கட்சி கட்சியாகவும், கட்சிகள் இணைந்த ஒரு கூட்டணியாகவும் பல முயற்சிகள் இன்று நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சஜீத் பிரேமதாசவை ஜனாதிபதியாக கொண்டு வருவதற்கு எமது பொத்துவில் பிரதேச மக்கள் நன்றி மறக்காதவர்கள் என்பதை இந்தத் தேர்தலில் வெளிக்காட்டுவார்கள் என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

Leave a Reply