உடல் பருமனுக்கும் ஆஸ்துமா பாதிப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
பருமனான உடல்வாகு கொண்ட நபர்களின் நுரையீரலில் கொழுப்புத் திசுக்களை ஆய்வாளர்கள் முதல்முறையாக கண்டுபிடித்துள்ளனர்.
52 பேரின் நுரையீரல் மாதிரிகளை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தபோது,
பி.எம்.ஐ. எனப்படும் உயரத்துக்கு ஏற்ற எடை கணக்கின்படி, நுரையீரலில் கொழுப்பின் அளவு அதிகரித்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.
உடல் எடை கூடி இருப்பவர்கள் அல்லது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஏன் ஆஸ்துமாஅபாயம் அதிகரிக்கிறது
என்பதை இந்தக் கண்டுபிடிப்பு மூலம் விளக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உடல் எடையைக் குறைப்பதன் மூலம் இவர்களின் உடல்நிலையைச் சீராக மாற்றியமைக்க முடியுமா
என்பதையும் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆஸ்துமா உடல் பருமனால் ஏற்படும்
நுண்ணோக்கி மற்றும் சாயங்களைப் பயன்படுத்தி நுரையீரல் மாதிரிகளிலிருந்து சுமார் ஆயிரத்து 400
சுவாசவழிப் பாதைகள் குறித்து விரிவான பகுப்பாய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.
பி.எம்.ஐ. அளவு அதிகமாக இருந்த பலருக்கு சுவாசப்பாதைகளின் சுற்றுப்புறத்தில் கொழுப்புத் திசுக்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
கொழுப்பு அதிகரித்தால் சுவாசவழிப்பாதைகள் இயல்பான நிலையிலிருந்து மாறி நுரையீரலை வீக்கமடையச் செய்யும். இதுவே அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஆஸ்துமாஅபாயம் இருப்பதை விளக்குகிறது.
அதிக எடை மற்றும் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு நிச்சயம் ஆஸ்துமாபாதிப்பு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது அல்லது மோசமான ஆஸ்துமா அறிகுறிகள்
இருக்கும் என இந்த ஆய்வில் பணிபுரிந்த பெர்த்தில் உள்ள வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் டாக்டர் பீட்டர் நோபல் கூறுகிறார்.
அதிக எடை காரணமாக நுரையீரலில் ஏற்படும் நேரடி அழுத்தம் அல்லது அதிக எடையால் பொதுவாகவே
நுரையீரல் வீக்கம் அடைந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் விவரிக்கின்றனர்.
ஆனால், இவர்களின் ஆராய்ச்சி மற்றொரு செயல்முறையையும் விளக்குகிறது என்று கூறுகிறார் பீட்டர் நோபல்.
நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் காற்றுப்பாதைகள் வீக்கமாக
இருப்பதே ஆஸ்துமாஏற்படுவதற்கான அறிகுறிகளின் அதிகரிப்புக்குக் காரணம் எனக் கருதுவதாகத் தெரிவிக்கிறார், பீட்டர் நோபல்.
உடல் எடைக்கும், சுவாச நோய்க்கும் இடையே உள்ள தொடர்பில் இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாகப்
பார்க்கப்படுகிறது. ஏனெனில், அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பது ஆஸ்துமா நோயாளிகளுக்கு எவ்வளவு மோசமான அறிகுறி என்பதை இது காட்டுகிறது என்று
ஐரோப்பிய சுவாசக் கழகத்தின் தலைவர் தியரி டுரூஸ்டர்ஸ் கூறுகிறார்.
உடல் எடையைக் குறைப்பதன் மூலம் கொழுப்புத் திசுக்களின் இந்தக் கட்டமைப்பை மாற்றியமைக்க
முடியுமா என்பதை அறிய கூடுதலாக ஆராய்ச்சி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.
பிரிட்டிஷ் தொராக்சிக் சொசைட்டி என்ற அறிவியல் அமைப்பின் தலைவர் டாக்டர் எலிசபெத் சாபே, உடல் எடை
நுரையீரலில் உள்ள காற்றுப்பாதைகளின் கட்டமைப்பைப் பாதிக்கும் என்று சுட்டிக் காட்டப்படுவது இதுவே முதல்முறை என்கிறார்.
பொதுவாகவே, உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பது பல்வேறு உடல்நலப் பாதிப்புகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.