வனவிலங்கு குற்றத்திற்காக விதிக்கப்பட்ட அதிகூடிய அபராதம்
வனவிலங்கு குற்றத்திற்காக விதிக்கப்பட்ட அதிகூடிய அபராதம் ,யால தேசிய பூங்காவில் இருந்து 92 வகையான வண்ணத்துப்பூச்சிகள் உட்பட நூற்றுக்கணக்கான உள்ளூர் பூச்சிகளை கடத்த முயன்ற இத்தாலிய தந்தை மற்றும் அவரது மகனுக்கு 6 கோடி ரூபா (இல்ஙகை பெறுமதி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொகை 200,000 அமெரிக்க டொலர்களுக்குச் சமமாகும்.
பூச்சிகளை சட்டவிரோதமாக சேகரித்தல், வைத்திருத்தல் மற்றும் கடத்தியதற்காக கடந்த செப்டம்பர் மாதம் அவர்கள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதமானது வனவிலங்கு குற்றத்திற்காக இலங்கையில் விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதமாகும்.
திஸ்ஸமஹாராம நீதவான் தரிந்து சமீர டி சில்வா கடந்த 3ஆம் திகதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக 810 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகவும், பின்னர் அது 304 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இத்தாலியர்கள் சார்பாக ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த சட்டத்தரணிகள் குழு முன்னிலையாகி, சந்தேக நபர்களை அனுதாபத்துடன் பார்த்து குறைந்தபட்ச அபராதம் விதிக்குமாறு நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
பிரதிவாதிகளுக்கு உண்மைகளை விளக்கிய நீதவான், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதிவாதிகள் வெளிநாட்டு பிரஜைகள் என்பதால், இந்த வழக்கை விரைவாக தீர்க்க நீதிமன்றம் மிக விரைவாக செயல்பட்டு, அது தொடர்பான நிபுணர் அறிக்கைகளை உடனடியாக பெற்றுக்கொண்டதாக குறிப்பிட்டார்.
வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின்படி, பாதுகாக்கப்பட்ட விலங்குகளுக்கு எதிரான குற்றம் என்பதால், தாக்கல் செய்யப்பட்ட 304 குற்றச்சாட்டுகளிலும் இருவரும் குற்றவாளிகள் என்று நீதவான் கூறினார்.
அதன்படி, ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் உரிய அபராதத் தொகை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதுடன், அதன் மொத்தத் தொகை 6 கோடியே 1 இலட்சத்து 80,000 ரூபா என நீதவான் அறிவித்துள்ளார்.
இந்த அபராதத் தொகையை இம்மாதம் 29ஆம் திகதி செலுத்துமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், அபராதத் தொகையை செலுத்தும் வரை இரு வெளிநாட்டவர்களையும் நாட்டை விட்டு வெளியேற அனுமதியில்லை எனவும் தெரிவித்துள்ளது.