பாரதமே இவர்களையாவது பறக்கவிடு

பாரதமே இவர்களையாவது பறக்கவிடு
Spread the love

பாரதமே இவர்களையாவது பறக்கவிடு

பாரதமே!
இருப்பவர்களையாவது
இறக்கவிடாமல் பறக்கவிடு!
விழிமேல் விழிவைத்து
வேண்டாத நேர்த்தி வைத்து
வழியெங்கும் காத்திருந்த
வயதான தாய்மைக்கு
பழிதீர்த்த பாரதமே
பாரினில் உன்செயல் பாதகமே!

சத்துமா வாங்கிவைத்து
சாந்தன் மகனுக்கொரு
முத்தம் கொடுக்கும்வரை
முகம்காணும் மகிழ்வுவர
சுத்துமாத்து செய்து எப்படியே
செத்துப்போக விட்டுட்டியே!

இளமை கருக கருக
இளகாத உன்குணம்
வழமைக்கு மாறுமென்று
வாசல்வழி பார்த்திருக்க
தனிமைக்கும் முதுமைக்கும்
தண்டனையை கொடுத்திட்டியே!

தப்புச் செய்யாதவரையும்
தண்டனையால் வதைத்து
எப்படித்தான் மனம்வருகுது
எங்கள் வலியில் விளையாட
இப்படித்தான் இனியும் நடக்கும்
இருப்பவர்களையாவது பறக்கவிடு!

-பிறேமா(எழில்)-