தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்

தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்
Spread the love

தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்

அறம் சிறக்க நெஞ்சில் மறம் பிறக்க
மானத் திறம் இருக்க
இரும்புத் தோள்கள் கொண்டு
தமிழர் துயர் துடைக்க
ஈழ மண் விடுதலையடைய
வியர்வை சிந்தி தங்கள்
அயர்வை மறந்து இளமைக் காலக்
கனவைத் துறந்து
கரிகாலன் படையில் இணைந்து
வெஞ்சமர் புரிந்து எதிரியை
வீழ்த்தி
தனித் தமிழீழம் பெற
வழிகாட்டியே
சந்தனப் பேழைகளில்
உறங்கும் மாவீரர்களே
மரணத்தை வென்று மீண்டும் பிறப்பீர்கள்
தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்

சாகலின் நன்றோ அடிமையாய் வாழ்வது
என உணர்ந்து
வீறு கொண்டெழுந்து
ஆண்டுகொண்டிருக்கும்
சிங்களத்தின் பிடியினுள்
மாண்டு கொண்டிருந்த
எம் இனத்தினை
மீண்டு எழ உரிமை உணர்வினை தூண்டினீர்!
உம்முடல் தன்னும் அதனுள் ஓடும் செங்குருதியும் உணர்வும் நரம்பும்
எம் தமிழீழத்திற்கும் எம் தமிழ் மக்களுக்குமே என்று
ஆகுதியாகினீர்
மரணத்தை வென்று மகுடத்தை அமைத்த மாவீரரே
தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்!

தமிழர் நிலம் காத்தீர்
தமிழ் மக்கள் உயிர் காத்தீர்
உம் உயிர் தான் மொழி,இனம்,நிலம் என வாழ்ந்தீர்
எம் இன அடிமை நிலை உடைத்தெறிந்தீர்
என்றும் எங்கள்
மனங்களில் உறவாக
உயிராக உணர்வாக இருப்பீர்
ஈழ மண்ணை நேசித்து
அதனால் மரணத்தை யாசித்த மாவீரரே
தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்!
பலித்திடும் உங்கள் கனவு
மலர்ந்திடும் எம் தமிழீழம்!!!!

-நிலாதமிழ்.