தமிழேந்தியப்பா

தமிழேந்தியப்பா
Spread the love

தமிழேந்தியப்பா

அன்பினிலே கனிந்தவரே
பண்பினிலே முதிர்ந்தவரே
பல்துறையும் கற்றவரே
செல்வச்சீர் பெற்றிருந்தும்
மலர்ப்படுக்கை வாழ்விருந்தும்
தன்நலம் கருதாமல்
இனமானம் பெரிதென்று
தனையீந்து போராடி
தமிழின விடுதலைக்கு
உரம் சேர்க்க வந்தவரே!!!

தமிழேந்தியப்பா

இனியேனும் எமக்கு
விடிவேதும் கிடைக்கும் என்று
எம் தலைவன் கைகோர்த்து
பனியென்றும் குளிரென்றும்
மழையென்றும் வெயிலென்றும் பாராமல்
தெருத்தெருவாய் ஊரூராய்
திரிந்து நிதி திரட்டி
எம்படை வளர்த்தவரே!!!

மொழியெனப்படுவது விழியெனக் கருதி
பழியெனப் பிறமொழி கலப்பது துறந்து
மொழி நலமும் இன நலமும் கொண்டு
அன்னைத் தமிழுக்கே அடி பணிந்து
தன்னைத் தமிழுக்கே தந்து தமிழ் காத்து
எம் தலைவன் மதிப்பினிலே மூத்தவராய்
அறப்போர் புரிந்து சிறப்பாந் தமிழில்
மறப்போர் புரிந்தவரே!!!

எம் ஈழ தேசத்தின் முதுகெலும்பாய்
நிதித்துறையின் ஆலமரமாய் இருந்தவரே
பிள்ளைகளாய் எங்களைப் பார்த்தவரே
உங்கள் பிரிவினிலால் எங்களை வதைத்தவரே
எம் நெஞ்சினிலும் நினைவினிலும்
தமிழேந்தி அப்பாவே நீங்கள் தான்
நெட்டுயிர்க்கின்ற எம் மூச்சினிலும் நீங்கள் தான்
உங்கள் பெயர் சொல்லி தடம் பதித்து
விழுதுகள் நாம்
தேசத்தின் பணி தொடர்வோம்!!!

-நிலாதமிழ்.