மண்ணை பிரிந்தவர் மன குமுறல் ..!

Spread the love

மண்ணை பிரிந்தவர் மன குமுறல் ..!

புழுதி உழவடித்து
புழுவாய் அதில் உழைத்து …
சேர்த்த பணம் போல
சொர்க்கம் ஏது வரும் …?

தலை சாய்த்த கதிர் கோதி
தலையறுத்து நிலம் வீழ்த்தி …
மண்டையில் மிதி மிதித்து
மணிகளை அள்ளியது போல் …..

சுனை பிடிச்சு உடல் கடிக்க
சுழன்று குளம் மிதக்க …
ஆடி பாடிய நாள்
அது போல ஏது சுகம் ..?

கோயில் மணியடிக்க
கொழுவி நிரை பிடிக்க …
கரம் வீழ்ந்த பிரசாதம்
கனி போல ஏது சுகம் …?

உடன் ஆய்ந்த காய் கறிகள்
உடனடி உலையேற ….
அடி பட்டு வாய் சுவைத்த
அது போல நாள் வருமா …?

எல்லாம் இருக்கிறது
எங்களவன் தேசத்தில் …
அதை எல்லாம் மறந்தேன்
அன்னியன் தேசத்தில் …?

சிங்கள தனி சட்டம்
சிறை நிரப்ப தமிழினத்தை …
வாழவா முடியும்
வந்தேறிகள் சுடுகாட்டில் ..?

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -19/12/2018

Home » Welcome to ethiri .com » மண்ணை பிரிந்தவர் மன குமுறல் ..!

Leave a Reply