கிழக்கு மாகாண ஆளுனருக்கு மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய அதிரடி உத்தரவு
கிழக்கு மாகாண கணக்காய்வு திணைக்களத்தில், கணக்காய்வு அலுவலராக தங்களை நியமனம் செய்ய வேண்டும் என 8 வருடம் கணக்காய்வு திணைக்களத்தில் கடமையாற்றிய அரச உத்தியோகத்தர்கள் நால்வர், கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளர் மற்றும் 11 எதிர் மனுதாரர்களுக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த நால்வரையும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கிழக்கு மாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களத்தில் கணக்காய்வு உத்தியோகத்தர்களாக நியமனம் செய்யும் படி கிழக்கு மாகாண புதிய ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு, திருகோணமலை மேல் நீதிமன்றில் நீதிபதி இளஞ்செழியனால் இன்று (27.07) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
13 வது திருத்தச் சட்டத்தில் அதிகார பரவலாக்கல் வழங்கப்பட்ட போதும் வடக்கு மாகாணம் மற்றும் தென் மாகாணமும் இத்தகைய நியமனம் வழங்கி இருக்கும் நிலையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர், அதிகாரியின் அசமந்தப் போக்கு, கவனயீனமான செயற்பாடுகள், 13வது திருசத்தச் சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்ட போதும் அதை செயற்படுத்தாமை, கடந்த 10 ஆண்டுகளாக இவ்வழக்கின் மனுதாரர்களுக்கு குறிக்கப்பட்ட நியமனங்களை வழங்காது இழுபறி நிலைமையை ஏற்படுத்தி காலதாமதப்படுத்தியமை போன்ற பல சட்ட விடயங்களை சுட்டிக்காட்டிய நீதிபதி இளஞ்செழியின் உடன் நடைமுறைக்கு வர வேண்டும் என புதிய ஆளுநருக்கு உத்தரவு பிறப்பித்து இன்று தீர்ப்பளித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுனருக்கு மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய அதிரடி உத்தரவு
இன்றைய கட்டளையை உடனடியாக புதிய ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு அனுப்பி வைக்குமாறு மேல் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.
முன்னாள் ஆளுநர் செய்த தவறுகளை சுட்டிக்காட்டிய நீதிபதி இளஞ்செழியன் புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநரிடம் இந்த நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதிய ஆளுநர் இவ்வழக்கில் எந்தவித விடயங்களையும் கையாளவில்லை என்றபோதும் பழைய ஆளுநர்களின் தவறுகளை சுட்டிக்காட்டிய நீதிபதி இந்த மனுதாரர்களின் எதிர்பார்க்கும் நியமனத்தை புதிய ஆளுநர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டளை பிறப்பித்துள்ளார்.