ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, பிரதீக் பார்பர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் தீம் மியூசிக் உடன் கூடிய வீடியோ போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.
இதனை தமிழில் கமல்ஹாசன், தெலுங்கில் மகேஷ் பாபு, மலையாளத்தில் மோகன்லால் மற்றும் இந்தியில் சல்மான் கான் ஆகியோர் வெளியிட்டனர். இதன் தீம் மியூசிக் மற்றும் ரஜினியின் ஸ்டைலான லுக் ஆகியவற்றுக்கு ரஜினி ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்தி போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சல்மான் கான், “என் வாழ்த்துகள் வெறும் சூப்பர் ஸ்டாருக்கு அல்ல, ஒரே சூப்பர் ஸ்டாருக்கு” என்று தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த், சல்மான் கான்
தர்பார் வரும் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் ஆதித்யா அருணாச்சலம் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். ஆதித்யா என்பது படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசின் மகன் பெயர். அருணாச்சலம் என்பது முருகதாசின் அப்பா பெயர். ‘தர்பார்’ படத்தை தொடர்ந்து ரஜினி, சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.