இளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகை

Spread the love
இளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகை

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அரசு முறை பயணமாக நாளை (புதன்கிழமை) இந்தியா வருகிறார். இங்கு 2 நாட்கள் தங்கியிருக்கும் அவர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்க இருப்பதாக இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் சர் டோமினிக் அஸ்குயித் கூறினார்.

அதன்படி குருநானக்கின் 550-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையிலும், இங்கிலாந்து வளர்ச்சியில் சீக்கியர்களின் பங்களிப்பின் நினைவாகவும் குருத்வாரா ஒன்றில் வழிபாடு நடத்துவார். மேலும் முதல் மற்றும் 2-ம் உலகப்போரில் காமன்வெல்த் நாடுகளின் சார்பில் பங்கேற்று உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ராணுவ நிகழ்ச்சி ஒன்றை பார்வையிடுகிறார்.

முன்னதாக இயற்கை பேரிடர் மற்றும் பருவநிலை மாற்றத்தை வலிமையுடன் எதிர்கொள்வது குறித்து இந்திய வானிலை ஆய்வுத்துறை அதிகாரிகளுடன் சார்லஸ் ஆலோசனை நடத்துவார். மேலும் தேசிய பேரிடரை எதிர்கொள்வதற்கு புதிய கண்டுபிடிப்புகளை இந்தியா எவ்வாறு பயன்படுத்துகிறது? என்பது குறித்தும் அவர் அறிந்து கொள்வார்.

தனது 71-வது பிறந்த நாளை 14-ந்தேதி (வியாழக்கிழமை) இந்தியாவிலேயே கொண்டாடும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், சமூக மேம்பாட்டு திட்டங்களில் சிறப்பான பங்களிப்பை செய்தமைக்காக இந்தியருக்கு காமன்வெல்த் விருதையும் வழங்க உள்ளார்.

மேலும் இந்தியாவின் முன்னணி வர்த்தகர்களை சந்தித்து பேசும் சார்லஸ், நிலையான சந்தை நிலவரத்தை கண்டடைவதற்கான ஆலோசனை மற்றும் வழிமுறைகளை அவர்களிடம் கேட்டுப்பெறுவார் எனவும் டோமினிக் அஸ்குயித் தெரிவித்தார்.

Author: நலன் விரும்பி

Leave a Reply