அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி மெக்கின்சிக்கு 2-வது திருமணம்
அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ் அமேசானை தொடங்குவதற்கு முன்பே, நாவலாசிரியரான மெக்கின்சி ஸ்காட்டை காதலித்து, திருமணம் செய்துகொண்டார்.
அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி மெக்கின்சிக்கு 2-வது திருமணம்
டான்-மெக்கின்சி
வாஷிங்டன்:
உலகின் முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ். அமேசானை தொடங்குவதற்கு முன்பே, நாவலாசிரியரான மெக்கின்சி ஸ்காட்டை காதலித்து, திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவரின் திருமணம் 1993-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்தது. 1994-ம் ஜூலை மாதம் ஜெப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தை தொடங்கினார்.
இந்த தம்பதிக்கு 3 மகன்களும் சீனாவிலிருந்து தத்தெடுக்கப்பட்ட ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் 26 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு ஜெப் பெசோஸ்-மெக்கின்சி ஸ்காட் தம்பதி கடந்த 2019-ம் ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அதனை தொடர்ந்து அமேசான் நிறுவனத்தின் 4 சதவீத பங்குகளை தனது மனைவிக்கு ஜீவனாம்சமாக ஜெப் பெசோஸ் வழங்கினார்.
இதன் மூலமும் பிற சொத்துகள் மூலமும் மெக்கின்சி ஸ்காட், உலகின் பணக்கார பெண்களில் ஒருவராக மாறினார்.
இந்த நிலையில் தனது மகன் படிக்கும் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் டான் ஜூவெட் என்பவரை மெக்கின்சி ஸ்காட் மறுமணம் செய்துள்ளார்.
இதுகுறித்து மெக்கின்சி கூறுகையில் ‘‘டான் ஒரு சிறந்த நபர். இப்போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளேன். இருவரும் உற்சாகமாக உணர்கிறோம்” என்றார்.
டான் கூறும்போது, ‘‘நான் அறிந்தவரை மிகவும் பெருந்தன்மை கொண்ட மற்றும் அன்பான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளேன். பிறருக்கு உதவும் பணியில் மெக்கின்சியுடன் நானும் இணைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்