அநுரவின் ஆட்சி தலிபான் ஆட்சியை ஒத்தது

அநுரவின் ஆட்சி தலிபான் ஆட்சியை ஒத்தது
Spread the love

அநுரவின் ஆட்சி தலிபான் ஆட்சியை ஒத்தது

அநுரவின் ஆட்சி தலிபான் ஆட்சியை ஒத்தது ,இடதுசாரி தலைவர்கள் அதிகாரத்துக்கு வந்த எந்த நாடும் முன்னேற்றமடைந்தும் இல்லை.

அந்த நாட்டு மக்கள் அழகான வாழ்க்கை வாழ்ந்ததும் இல்லை, கியுபா, வெனிசுலா போன்ற நாடுகள் இதற்கு சிறந்த உதாரணமாகும் என ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மாவட்ட அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தின் நோக்கமாக இருப்பது, வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதாகும்.

ஆனால் இடதுசாரி தலைவர்கள் அதிகாரத்தில் இருக்கும் நாட்டில் எங்காவது வளமான நாடு அழகான வாழ்க்கை இருக்குமானால் அந்த நாட்டை இவர்கள் காட்ட வேண்டும்.

கியுபாவின் இடதுசாரி கொள்கையுடைய ஆட்சியாளரான பிடல் கஸ்ட்ரோ சிறந்த ஜனநாயக தலைவர். ஆனால் அவருக்கு அவது நாட்டை கட்டியெழுப்ப முடியாமல் போனது.

கியுபாவை வளமான நாடாக்கவோ அந்நாட்டு மக்களுக்கு அழகான வாழ்கையையை ஏற்படுத்திக்கொடுக்கவோ முடியவில்லை. கியுபா உலக நாடுகளில் இருந்து தனிப்பட்டு, ஒதுக்கப்பட்ட நாடாக மாறியுள்ளது.

அனுரகுமார திஸாநாயக்கவும் இடதுசாரி கொள்கையுடைய தலைவர். இரண்டு தடவைகள் ஆயுத முனையில் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்தவர்.

அவரே தற்போது ஜனநாயக முறையில் அரசியல் கட்சி ஊடாக அதிகாரத்துக்கு வர முயற்சிக்கிறார்.

அவர்களின் எதிர்காலம் அனைவருக்கும் தெரியும். நாட்டில் வன்முறையை தோற்றுவித்து பல அழிவுகளை மேற்கொண்டவர்கள்.

அதனால் அவர்கள் அதிகாரத்துக்கு வந்தால் எவ்வாறான நிலை ஏற்படும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

அதேபோன்று வெனிசுலா நாட்டின் தலைவரும் இடதுசாரி கொள்கையுடையவர். அவரின் ஆட்சியின் கீழ் இருந்து 70இலட்சம் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.

உலக எரிபொருள் உற்பத்தியில் 4ஆவது இடத்தில் வெனிசுலா இருக்கிறது. என்றாலும் அவர்களுக்கு பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய முடியாமல் போயிருக்கிறது.

அந்த நாட்டு தலைவருக்கும் வெனிசுலாவை வளமான நாடாக்கவோ அந்நாட்டு மக்களுக்கு அழகான வாழ்கையையை ஏற்படுத்திக்கொடுக்கவோ முடியாமல் போயிருக்கிறது.

ஆசியாவில் வட கொரியாவில் இடதுசாரி கொள்கையுடைய ஆட்சியாளரே இருந்து வருகிறார் அங்கு தனி ஆட்சியே இடம்பெறுகிறது. ஜனநாயகம் இல்லை. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் ஒன்றும் தெரியாது.

அந்த நாடும் உலகில் ஏனைய நாடுகளில் இருந்து ஒதுக்கப்பட்டு, சர்வதேச நாடுகளுடன் எந்த தொடர்பும் இல்லாத நாடாகவே இருந்து வருகிறது.

அதேபோன்று சீனாவில் இடதுசாரி கொள்கையுடைய கம்யூனிஸ்ட் கட்சி மாத்திரமே இருக்கிறது.

வேறு கட்சிகள் அங்கு இல்லை. அந்த நாடு வளமான நாடு. ஆனால் அந்த நாட்டில் ஜனநாயகம், சுதந்திரம் இல்லை.ஊடக, கலாசார சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்ட நாடாகும்.

அதனால் இடதுசாரி கொள்கையுடைய தலைவர்கள் அதிகாரத்தில் இருக்கும் எந்த நாட்டிலும் அனுரகுமார ஏற்படுத்தப்போகும், வளமும் இல்லை.

அந்த மக்களுக்கு அழகான வாழ்க்கையும் இல்லை. அதேநேரம் அடிப்படைவாத கொள்கையுடைய தலிபான் ஆட்சியை போன்ற ஆட்சிக்கே அனுரகுமார முயற்சிக்கிறார்.

அந்த நிலைக்கு எமது நாட்டை கொண்டு செல்ல மக்கள் இடமளிக்கப்போவதில்லை என்றார்.