இறைச்சிக் கடைகள் 03 தினங்கள் மூட உத்தரவு

இறைச்சிக் கடைகள் 03 தினங்கள் மூட உத்தரவு
Spread the love

இறைச்சிக் கடைகள் 03 தினங்கள் மூட உத்தரவு

கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற மாட்டிறைச்சிக் கடைகள், ஆட்டிறைச்சிக் கடைகள் மற்றும் கோழியிறைச்சிக் கடைகள் யாவும் மூடப்பட வேண்டும் என மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி பணிப்புரை விடுத்துள்ளார்.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைவாக நாடு முழுவதும் 04ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 06ஆம் திகதி சனிக்கிழமை வரையான 03 நாட்களுக்கு மாடு, ஆடு மற்றும் கோழி என்பன அறுத்து, விற்பனை செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் மேற்படி 03 தினங்களும் கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற மாட்டிறைச்சிக் கடைகள், ஆட்டிறைச்சிக் கடைகள் மற்றும் கோழியிறைச்சிக் கடைகள் யாவும் மூடப்பட வேண்டும் என மாநகர ஆணையாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் கல்முனை மாநகர சபை எல்லையினுள் சேனைக்குடியிருப்பு நற்பிட்டிமுனை மணல்சேனை மருதமுனை பெரியநீலாவணை பாண்டிருப்பு சாய்ந்தமருது கல்முனை மாநகர பகுதிகளில் மாட்டிறைச்சிக் கடைகள், ஆட்டிறைச்சிக் கடைகள் மற்றும் கோழியிறைச்சிக் கடைகள் இயங்கி வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதே வேளை, கல்முனை மாநகர சபை எல்லையினுள் மாட்டிறைச்சியை கட்டுப்பாட்டு விலையில் விற்பதற்கு சில இறைச்சிக்கடை உரிமையாளர்கள் உதாசீனமாக செயற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இறைச்சிக் கடைகள் 03 தினங்கள் மூட உத்தரவு

அண்மையில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இறைச்சிக் கடை உரிமையாளர்களுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் போது அவர்களது இணக்கப்பாட்டுடன் கட்டுப்பாட்டு விலை தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டிருந்தது.

இதன்படி, ஒரு கிலோ கிராம் தனி இறைச்சியை 2,000 ரூபாவுக்கும் 200 கிராம் முள் சேர்க்கபட்ட ஒரு கிலோ கிராம் இறைச்சியை 1,800 ரூபாவுக்கும் விற்பனை செய்வதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இவ்விலைப்பட்டியலை அனைத்து இறைச்சிக் கடைகளிலும் காட்சிப்படுத்தும் பொருட்டு குறித்த விலைப்பட்டியல் ஆணையாளரினால் இறைச்சிக் கடைகளின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தன.

ஆனால் ,சில இறைச்சி கடை உரிமையாளர்கள் குறித்த கட்டுப்பாட்டு விலையை மீறி தான்தோன்றித்தனமாக விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.