
வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
தெல்தெனிய பிரதேசத்தில் திருடப்பட்ட 03 ஜீப் வண்டிகளுடன் சந்தேக நபர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (29) காலை கெப் வண்டியில் வந்த சிலர் இந்த கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த வாகன காட்சியறையில் பணிபுரிந்த இரு ஊழியர்களை கட்டிப்போட்டுவிட்டு சந்தேக நபர்கள் 04 வாகனங்களை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
03 டிஃபென்டர் ரக ஜீப் வண்டிகள் மற்றும் வேன் என்பன கொள்ளையிட்டுச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
அதன்போது, வத்தேகம பகுதியிலுள்ள வீடொன்றின் பின்புறம் உள்ள கராஜ் ஒன்றில் திருடப்பட்ட 03 ஜீப்களில் 02 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அப்போது, மூன்று சந்தேக நபர்களுடன் கொள்ளைக்காக வந்த கெப் வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வத்தேகம பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன், தெல்தெனிய பொலிஸாரிடம் ஒப்படைத்த பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 27, 32 மற்றும் 34 வயதுடைய குன்னபான, தொரகமுவ மற்றும் ரஜவெல்ல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
அத்துடன், கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம், நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னில பிரதேசத்தில் திருடப்பட்ட மற்றைய ஜீப் வண்டியுடன் மற்றுமொரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 28 வயதுடைய வத்துபிட்டியலை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.