தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்த தடை
தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரிஎன்ஏ) என்ற பெயரைக் கைப்பற்ற ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனி எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்திருக்கின்றது. அந்தப் பெயரை கூட்டனி பயன்படுத்த தேர்தல் ஆணைக்குழு மறுப்புத் தெரிவித்து விட்டது.
புளொட் அமைப்பைச் சேர்ந்தவரான ஆர்.ராகவன் என்பவரை செயலாளராக கொண்டு பதிவு செய்யப்பட்ட ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியை தமது புதிய கூட்டாக ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், தமிழ் தேசியக் கட்சி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி என்பன ஆக்கிக் கொண்டன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சி தாமாகவே வெளியேறி விட்டதாக கூறி ரெலோ மற்றும் புளொட் ஆகியன மற்றைய மூன்று கட்சிகளையும் இணைத்துக் கொண்டு தாமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என கூறி வந்தன. அதேநேரம் அழைப்பு விடுக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனி என்ற பதிவு செய்யப்பட்ட கூட்டு அணியில் இணைந்து கொண்டன.
ஆங்கிலத்தில் டிரிஎன்ஏ என்று வரக் கூடிய இந்தக் கூட்டணியின் ஆங்கிலப் பெயரில் உள்ள டி என்ற எழுத்தை சிறிதாக்கி விட்டு ரிஎன்ஏ என்ற மீதியை பெரிதாக்கி தாம் ரிஎன்ஏ என மக்களுக்கு கூறி வந்தது.
இந்த நிலையில் தமது கூட்டனிப் பெயரில் உள்ள ஜனநாயகத்தை நீக்கிவிட்டு தமிழ் தேசியக் கூட்டனி என்ற பெயரிற்கான ஆங்கிலப்பதமான ரிஎன்ஏ என்பதை பயன்படுத்த அனுமதிக்கும்படி தேர்தல் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பித்திருந்தன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்த தடை
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆங்கிலத்தில் ரிஎன்ஏ என்றே பயன்படுத்தி வந்தது. தமது கூட்டனிக்கு அந்த ஆங்கிலப் பெயரை பதிவு பெயராக எடுத்துக் கொண்டால் அது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒற்றுமைப்பாட்டை ஏற்படுத்தும் என்கிற அடிப்படையில் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.
ஜனநாயக கூட்டனியின் இந்த விண்ணப்பம் க்டந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தல் ஆணைக்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இதேபெயரில் வேறு கட்சி நீண்டகாலமதாக இயங்கி வருவதால் இந்த சொல்லாடல் இடம்பெறும் வகையிலான பெயரிற்கு அனுமதிக்க முடியாது என தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்து குறித்த கட்சிக்கு எழுத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி இனிமேல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெரையோ அல்லது ரிஎன்ஏ என்ற பெயரையோ பயன்படுத்த முடியாது.