சமஷ்டியே உரிய தீர்வு – விக்கி ஐயா இடித்துரைப்பு

சமஷ்டியே உரிய தீர்வு – விக்கி ஐயா இடித்துரைப்பு

தமிழ் மக்களுக்கான நிறைந்த இறுதித் தீர்வு, சர்வதேச சமூகத்தால் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் ஊடாகவே நடைபெற வேண்டும் என்பதே தமது நிலைப்பாடென, பாராளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன் எம். பி. தெரிவித்தார்.

அத்துடன், தமிழ்க் கட்சிகள் காலம் காலமாக சமஷ்டியை ஒரு தீர்வாக வலியுறுத்தி வருகின்றன. கூட்டு சமஷ்டியே நிரந்தர தீர்வாக அமைய முடியும் என்பது எமது கூட்டணியின் நிலைப்பாடு எனவும், அவர் கூறினார்.

ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கும் முகமாக, நேற்று முன்தினம் (28), அவர் அனுப்பி வைத்த பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில், தங்களுடன் சேர்ந்து பல தமிழ்க் கட்சிகள் அண்மையில் கூடி 13ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியாவை வலியுறுத்துவதற்கு எடுத்த தீர்மானத்துக்கும் தமது அரசியல் தீர்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது எமக்கு நாம் விரும்பும் ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ளும் காலம் கனிந்துவிட்டதாகவும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் 13ஆவது திருத்த சட்டத்தை இதனால்தான் வலியுறுத்துகின்றோம் என்பதுபோலவும் உண்மைக்கு மாறான கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன எனவும், அவர் தெரிவித்துள்ளார்.

அன்றே, நாம் 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஒற்றுமையுடன் நடவடிக்கை எடுத்து இருந்தால், இன்று மிகவும் பலமான ஒரு நிலையில் இருந்திருப்போம் எனத் தெரிவித்துள்ள அவர், அந்த நிலையில் நின்று கொண்டு எமது நிரந்தரத் தீர்வுக்காகப் போராடியிருப்போம் எனவும் இன்று எமது நிலை மிகவும் வருத்தத்துக்கு உரியதாக மாறியுள்ளது எனவும் குறிப்பிட்டுள.கால்.

“தீர்வுக்கான எமது நடவடிக்கைகளும் ஒற்றையாட்சியின் கீழ் 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கான எமது முயற்சிகளும் வெவ்வேறானவை. அவை சாமாந்திரமானவை, ஒருபோதும் ஒன்றுடன் ஒன்று சந்திக்க முடியாதவை.

“தமிழ் மக்களுக்கான நிறைந்த இறுதித் தீர்வு சர்வதேச சமூகத்தால் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் ஊடாகவே நடைபெற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. தமிழ் கட்சிகள் காலம் காலமாக சமஷ்டியை ஒரு தீர்வாக வலியுறுத்தி வருகின்றன. கூட்டு சமஷ்டியே நிரந்தர தீர்வாக அமைய முடியும் என்பது எமது கூட்டணியின் நிலைப்பாடு. இதனை நாம் தீர்மானிக்க முடியாது. எமது மக்களே தீர்மானிக்க வேண்டும்.

“அதனால்தான் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு நாம் கோரிக்கை முன்வைத்திருக்கின்றோம். இதனை இந்தியாவிடமும் நாம் வலியுறுத்தி உள்ளோம். மீண்டும் வலியுறுத்துவோம். ஆனால், சர்வஜன வாக்கெடுப்பு இன்று நடக்கும், நாளை நடக்கும் என்று எதிர்பார்த்திருந்து எமது நிலத்தையும் மக்களையும் நாம் இழந்துவிடக்கூடாது.

“ஆகவே, ஏற்கெனவே இருக்கும் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி, சில வலுவூட்டும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளோம்” எனவும், அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply