கோட்டா மீது குண்டுத்தாக்குதல்: LTTE பொறியியலாளர் விடுவிப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய காலப்பகுதியில், கொள்ளுப்பிட்டி பித்தல சந்தியில் வைத்து தற்கொலைத்தாக்குதல் நடத்தி, அவரை படுகொலைச் செய்வதற்கு சூழ்சிகளை செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 17 வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் பொறியியலாளரான சிவலிங்கம் ஆரூரன் என்பவரே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, என்பவரால், நேற்று (16) விடுவிக்கப்பட்டார்.
கோட்டா மீது குண்டுத்தாக்குதல்: LTTE பொறியியலாளர் விடுவிப்பு
இந்த பொறியியலாளர் உதவி பொலிஸ் அதிகாரி சிசில் டி சில்வாவிடம் வாக்குமூலம் அளித்ததை தவிர எந்தவொரு சாட்சியமும் அவருக்கு எதிராக முன்வைக்கப்படவில்லை.
இதுதொடர்பில் முறைபாட்டாளர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிஸிட்ட ஜெனரல் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்ததை கவனத்தில் கொண்டு, சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் பொறியியலாளரான சிவலிங்கம் ஆரூரன் விடுவிக்கப்பட்டார்.
கோட்டாபய ராஜபக்ஷ, பயணித்த வாகன தொடரணியின் மீது கொள்ளுப்பிட்டி பித்தல சந்தியில் வைத்து, 2006 டிசெம்பர் 1ஆம் திகதி காலை 1.30 மணியளவில் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதலில் இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டு 14 பேர் படுகாயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. காயமடைந்தவர்களில் சாதாரண பொதுமக்கள் ஏழு பேரும் அடங்கியிருந்தனர்.