கஜீபரனின் அகாலமறைவுதுன்பம் தருகிறது -ஸ்ரீதரன் எம்பி உருக்கம்

சிறிதரன்
Spread the love

கஜீபரனின் அகாலமறைவுதுன்பம் தருகிறது -ஸ்ரீதரன் எம்பி உருக்கம்

நாம் சற்றேனும் நினைத்துப்பார்த்திராத பேரிழப்பாக நிகழ்ந்தேறியுள்ள தம்பி கஜீபரனின் அகாலமறைவு எமக்கு சொல்லொணாத் துன்பம் தருவதாக அமைந்துவிட்டது. மிகத் துடிப்புள்ள இளைஞனாக சமூகப்பணிகளில் தன்னை இணைத்துக்கொண்ட கஜீபரன், இளவயதிலேயே தீவிரமான தமிழ்த்தேசியப் பற்றாளனாகவும் தன்னைப் பதியமிட்டிருந்தான்.


அதன்வழியே, எமது கட்சியின் வாலிபர் முன்னணி உறுப்பினராக இணைந்துகொண்ட கஜீபரன் மிகுந்த நேர்மையும், நெஞ்சுரமும், விசுவாசமும், விடாமுயற்சியும் மிக்க இளைஞன் என்பதை, அவனோடு நெருங்கிப் பழகக் கிடைத்த சந்தர்ப்பங்களில் நான் அறிந்துகொண்டேன்.


மிகக் குறுகிய காலம் எனது அலுவலகத்தில் அவன் பணியாற்றிய நாட்களில், அவனது கடின உழைப்பையும், தன்னார்வத்தையும், எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவனது தீரத்தையும் நான் நேரிடையாகக் கண்டிருக்கிறேன்.

கஜீபரனின் அகாலமறைவுதுன்பம் தருகிறது -ஸ்ரீதரன் எம்பி உருக்கம்


தன் எதிர்காலம் குறித்த முழுமையான கனவுகளோடு பயணப்பட்ட ஒரு இளைய புதல்வனை இயற்கை தன்வசம் எடுத்திருப்பதை அன்பின்பாற்பட்டஎம் இதயங்கள் ஏற்க மறுக்கின்றன.


தான் பிறந்து, வளர்ந்த விசுவமடு மண்ணையும், தருமபுரம் மண்ணையும் முழுமூச்சாய் நேசித்த அவன், அந்த மக்களின் நலவாழ்வுக்காக தன்னாலான பல பணிகளை இக்குறுங்காலத்திலேயே ஆற்றிமுடித்திருக்கிறான்.


கட்சியின் எந்த நிகழ்வாயினும், மக்களின் எந்தத் துயராயினும் அதைத் தன் தோள்மேல் தானாய் ஏற்பதற்கு என்றுமே தயாராயிருந்த என் மனதிற்கு மிக நெருங்கிய தம்பி கஜீபரனின் ஆத்மா அமைதிபெறவும், இந்தப் பேரிழப்பால்

பெரிதும் கலங்கிநிற்கும் அவனது குடும்பத்தினர், உறவுகள், நண்பர்கள் எல்லோருக்கும் அவனது இழப்பை ஏற்கும் மனவலிமை வாய்க்க வேண்டும் என்றும் எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்திக்கிறேன்.


சிவஞானம் சிறீதரன்
பாராளுமன்ற உறுப்பினர்,
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,
கிளிநொச்சி