பெண்ணை ஏன் அழகாய் படைத்தாய்..?

பெண்ணை ஏன் அழகாய் படைத்தாய்..?

பூவுக்கு அழகை ஏன் படைத்தான் – இந்த
புவியில் ஆணையேன் ஏங்க வைத்தான்
கண்ணுக்குள் பார்வையை ஏன் வைத்தான் – இந்த
காதலை உலகில் ஏன் படைத்தான்

விண்ணுக்குள் நிலவை ஏன் வைத்தான் – இதை
விருப்பின்றி ஏன் அங் கடைத்தான்
பூவுக்குள் இதழை ஏன் வைத்தான் – இந்த
புன்னகையை ஏன் அங்கு சிறைவைத்தான்

மண்ணுக்குள் வேரை ஏன் மறைத்துவைத்தான் – இந்த
மாயத்தை ஏனோ செய்து வைத்தான்
சொல்லுக்குள் ஏனோ சந்தம் வைத்தான் – இந்த
செயலுக்குள் என் விந்தை வைத்தான்

மனதுக்குள் ஏனோ ஆசை வைத்தான் – இந்த
மயக்கத்தை ஏனோ அங்கடைத் தான்
பெண்ணுக்கு அழகை ஏனோ வைத்தான் – இந்த
பேரிடரை ஏனோ முன் படைத்தான் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 21-12-2021
இந்த வரியின் முடிவில் அல்லது அடியின் முடிவில் அதன் ஓசை ,,,
,,அத்தான் என ஒலிக்கிறது,,, படித்து பாருங்கள் ,மேலும் வரிகளின்
பின் இருந்து முன்னோக்கி சில சீரை படியுங்கள் அவை இரட்டை அர்த்தம் பேசும்

    Leave a Reply